Published : 04 Mar 2018 09:43 AM
Last Updated : 04 Mar 2018 09:43 AM

தமிழக குழுவை பிரதமர் சந்திக்காவிட்டால் அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

அனைத்துக் கட்சி தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க மறுத்தால், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்: உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு நேரில் வலியுறுத்த, அரசின் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூண்டோடு பதவி விலகுதல், டெல்லியில் பிரதமர் அலுவலகம், இல்லம் முன்பு தொடர்ந்து போராட்டங்களை நடத்துதல், தமிழகத்தில் காலவரையற்ற மறியல் போராட்டம் நடத்துதல் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே மத்திய அரசை பணிய வைக்க முடியும். எனவே, மேற்கண்ட போராட்டங்களை நடத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.க. தலைவர் கி.வீரமணி: அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்திப்பதற்கான தேதியை பிரதமர் அறிவிக்காததோடு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தியுங்கள் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் தமிழ்நாடு வந்த இத்துறையின் அமைச்சரான நிதின் கட்கரி, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க இயலாது என்று கூறினார்.

இந்நிலையில், தமிழக முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் ஆலோசித்து, சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றுவது என முடிவெடுத்தது வரவேற்கத்தக்கதாகும். அதன்பிறகும் மத்திய அரசு அசைந்து கொடுக்காவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழியே இல்லை. இதில், அனைவரும் ஓரணியில் இறுதிவரை நிற்க வேண்டும்.

இந்திய கம்யூ. மாநில தலைவர் இரா.முத்தரசன்: மக்களின் கோரிக்கைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கடமை உள்ள பிரதமர், அவரது பொறுப்புக்கு ஏற்ற முறையில் நடந்து கொள்ளாதது தமிழகத்தை அவமதிக்கும், ஆணவப் போக்காகும். மாநில அரசின் உரிமைகளை தொடர்ந்து பறித்துவரும் மத்திய அரசின் ஏதேச்சதிகாரப் போக்கைத் தடுத்து நிறுத்தும் வகையில் சட்டப்பேரவையைக் கூட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒன்றுபட்டு மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்

விசிக தலைவர் திருமாவளவன்: காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு தமிழகம் தீவிரமான போராட்டங்களில் இறங்க வேண்டும். அதன் வடிவத்தைத் தீர்மானிக்க அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x