Published : 24 Mar 2018 07:37 AM
Last Updated : 24 Mar 2018 07:37 AM

குரங்கணி காட்டுத் தீ: மேலும் 2 பெண்கள் பலி- இறந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆனது

குரங்கணி காட்டுத் தீயில் பலத்த காயம் அடைந்த பெண்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர். இதையடுத்து இச்சம்பவத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

போடி அருகே குரங்கணி மலையில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இவர்களில் 15 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இவர்களில் ஏற்கெனவே 9 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்நிலையில் மதுரை கென்னட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தஞ்சாவூர் எம்.கே. சாலையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகள் சாய்வசுமதி(26), மதுரை அப்போ லோ மருத்துவமனையில் சிகிச் சை பெற்ற சென்னையைச் சேர்ந்த கெல்தி ராஜன் மகள் நிவ்யா பிரகதி(24) ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர்.

சாய்வசுமதி சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நிவ்யா பிரகதி எம்பிஏ பட்டதாரி.

இவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததையடுத்து, இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

உடலை பெறுவதற்கு முன் நிவ்யா பிரகதியின் பெற்றோர் பிணவறைக்குச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த பெண் மருத்துவர்களிடம் “எங்களது ஒரே மகளின் உடல் உறுப்புகளை பிறருக்கு உதவும் வகையில் தானம் வழங்க சம்மதிக்கிறோம். இதன் மூலமாவது எங்களது மகள் உயிர் வாழ்வதாக இருக்கட்டும்” என உருக்கமாக கேட்டுக் கொண்டனர்.

ஆனால், தீக்காயம் அடைந் தோர் உறுப்புகளை தானம் பெறுவது இயலாது என மருத்துவர்கள் கூறினர். இருப்பினும், கண்களையாவது எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினர். அதற்கும் வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துவிட்ட னர். இதனால் பெற்றோர் சோகத் தில் ஆழ்ந்தனர்.

தற்போது மதுரை ராஜாஜிஅரசு மருத்துவமனையில் சிவசங்கரியும், அப்போலோ மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த மீனா ஜார்ஜ் என்பவரும் சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர சென்னையில் 4 பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x