Published : 16 Mar 2018 04:29 PM
Last Updated : 16 Mar 2018 04:29 PM

கேள்வியைத் தவிர்ப்பதற்காகவே அவ்வாறு பேசினேன்- சர்ச்சைப் பேச்சும் அமைச்சர் விஜயபாஸ்கரின் விளக்கமும்

தனது சர்ச்சைப் பேச்சு தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கிய தமிழக சுகாதாரத் துறை  அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "கேள்வியைத் தவிர்ப்பதற்காகவே அவ்வாறு பேசினேன்" எனக் கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, "பொதுவாக அரசியல் கேள்விகளை நான் தவிர்த்துவிடுவேன். அது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் பதிலளிப்பார்கள் என்பதால் அவற்றைத் தவிர்த்துவிடுவேன். துறை ரீதியான எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் எப்போதுமே தயாராக இருந்திருக்கிறேன், இருக்கிறேன். எப்போதும் பத்திரிகையாளர்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் நிலையில்தான் நான் இருக்கிறேன்.

குரங்கணி சம்பவம் தொடர்பாகக்கூட ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒருமுறை  பத்திரிகையாளர்கள்  என்னைத் தொடர்பு கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்குமே நான் பதிலளித்தேன். அது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

நேற்றைய சம்பவத்தில் அரசியல் கேள்வியைத் தவிர்ப்பதற்காகவே அவ்வாறு பேசினேன். எனது நோக்கம் அதுமட்டுமே. அனைத்து பத்திரிகையாளர்களையும் சகோதர, சகோதரியாகவே கருதுகிறேன். யார் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. சம்பந்தப்பட்ட சகோதரியிடமே நான் பேசிவிட்டேன்" எனக் கூறினார்.

நடந்தது என்ன?

முன்னதாக, நேற்றிரவு (வியாழன் இரவு) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றுது. கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு வெளியே வந்த அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் பெண் நிருபர் ஒருவர், சார்.. கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்னவென்று கேட்டார். அதற்கு அவர் முறையாக பதிலளிக்காமல் "உங்களுக்கு ஸ்பெக்ஸ் ரொம்ப அழகாயிருக்கு மேடம்" என்றார்.

தனது ஊடக நெறியிலிருந்து சற்றும் விலகாத அந்த பெண் நிருபர், "சார்.. நான் எப்போதுமே ஸ்பெக்ஸ் போட்டுக்கிட்டுத்தான் இருக்கேன்" என பதில் சொல்ல. "அப்ப இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க" என மீண்டும் அமைச்சர் பதில் அளிக்தார்.

சற்றும் தளராத அந்த நிருபர், "கூட்டத்தில் என்ன தீர்மானங்கங்கள் நிறைவேற்றப்படன" என வினவினார். அதற்கு, "பிரெஸ் ரிலீஸ் கொடுப்பாங்க மேடம்.. சீனியர் லீடர்ஸ் பேசுவாங்க" என்று சொல்லிக்கொண்டே நகர, அவரை விடாமல் பின்தொடர்ந்த அந்த நிருபர் "நீங்கள் உள்ளே இருந்தீர்கள் அல்லவா என்ன மாதிரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன" எனக் கேட்க "திரும்பி நின்று.. "அழகாயிருக்கீங்க.. அழகாயிருக்கீங்க.. அழகாயிருக்கீங்க..." என மூன்று முறை கூறிச் சென்றார்.

அமைச்சருக்கு இது அழகா?

அவரது இந்த செய்கைக்கு பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களிலும் பலரும் அமைச்சரை வண்மையாகக் கண்டித்து வருகின்றனர்.

கட்சித் தொண்டர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு அமைச்சரே இவ்வாறு பேசலாமா? இதனால், கட்சியில் உள்ள பிறரும் பெண்களிடம் இதுமாதிரியாக நடந்துகொள்ள வாய்ப்பு ஏற்படதா. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எவ்வளவு நாவடக்கத்துடன் செயல்பட வேண்டும். ஒரு அமைச்சருக்கு இது அழகா? என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "கேள்வியைத் தவிர்ப்பதற்காகவே அவ்வாறு பேசினேன்" எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x