இன்று மகாவீர் ஜெயந்தி: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

இன்று மகாவீர் ஜெயந்தி: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
Updated on
1 min read

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதல்வர் கே.பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

முதல்வர் கே.பழனிசாமி: அறத்தையும் அகிம்சையையும் இரு கண்களாக போற்றிய மகாவீரரின் பிறந்த தினத்தை கொண்டாடும் சமண சமய மக்கள் அனைவருக்கும் எனது மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இனிய நாளில், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமல் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, அமைதியான வாழ்வு வாழ வேண்டும் என்ற மகாவீரரின் போதனைகளை மக்கள் பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருமுகப்படுத்தி, அவற்றைக் கட்டுப்படுத்தி துயரில்லா வாழ்க்கை வாழ்ந்திடும் வழிமுறையை உலகுக்கு உரைத்தவர் மகாவீரர். அவரின் பிறந்த நாளை மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடும் ஜெயின் சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்: அரச வாழ்வை துறந்து, செல்வங்கள் அனைத்தையும் மக்களுக்கு தானமாக வழங்கியவர் மகாவீரர். அகிம்சை, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமை போன்ற உயர்ந்த நற்பண்புகளை உலகுக்கு உணர்த்தியவர். அவரது பிறந்த நாளை கொண்டாடும் சமண சமய மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: அமைதியும் பொறுமையுமே மனிதனை மேம்படுத்தும் என்று போதித்த மகாவீரரின் பிறந்த நாளை கொண்டாடும் இந்த நன்னாளில் அவரின் போதனைகளை பின்பற்றி வாழவும், அவர் விரும்பியவாறு மது என்ற அரக்கனை ஒழிக்கவும் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன்: மகாவீரரின் பிறந்த நாளை கொண்டாடும் சமண மதத்தை சார்ந்தவர்களுக்கும் அவரின் போதனைகளை கடைப்பிடிக்கும் அனைவருக்கும் எனது மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமக தலைவர் சரத்குமார்:

சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரர், மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், தாவரங்கள் உட்பட அனைத்து உயிர்களுக்கும் மதிப்பளித்தவர். அவரின் போதனைகளை அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in