Published : 02 Mar 2018 08:36 AM
Last Updated : 02 Mar 2018 08:36 AM

நாட்டிலேயே மும்பைக்கு அடுத்ததாக தமிழகத்தில் 5 பசுமை வழிச் சாலைகள்: மத்திய அரசு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் தகவல்

இந்தியாவிலேயே மும்பைக்கு அடுத்து 2-வதாக, தமிழகத்துக்கு பசுமை வழிச்சாலை திட்டத்தில் 5 சாலைகள் அமைக்க மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டத்தில் அவர் பேசியது: 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்ற தீர்ப்பை 120 ஆண்டுகளாக போராடிய பின் பெற்றுள்ளோம்.

கோதாவரி ஆற்றில் இருந்து கடலில் கலக்கும் 3 ஆயிரம் டிஎம்சி நீரை, நதிநீர் இணைப்பின் மூலம் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் முதல்வர் கோரிக்கை வைத்தார். இது நல்ல திட்டமாக இருப்பதால் செயல்படுத்துவோம் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

மும்பை-புனே இடையே மட்டும்தான் பசுமை வழிச்சாலை உள்ளது. இது 8 வழி சாலையாகும். இந்த சாலையில் விபத்து தவிர்க்கப்படுவதுடன், பயண நேரமும் பாதியாக குறையும். இத்திட்டத்தினை தமிழகத்துக்கும் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கே.பழனிசாமி வலியுறுத்தினார். இதையடுத்து இந்தியாவிலே 2-வது பசுமை சாலை திட்டத்தை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதில் சென்னை முதல் சேலம், மதுரை முதல் தனுஷ்கோடி, மேலூர் முதல் தஞ்சாவூர், கொட்டாம்பட்டி முதல் காரைக்குடி உட்பட மொத்தம் 5 வழித்தடங்களில் ரூ.48,000 கோடி மதிப்பில் 5 பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x