

ஆவின் பாலில் தண்ணீர் கலந்த வழக்கில் தொடர்புடைய வைத்தியநாதனை வருகிற 29-ம் தேதிவரை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திண்டிவனம் அருகே கோவிந்தாபுரம் பகுதியில் திருவண்ணாமலையில் இருந்து வரும் ஆவின் பால் டேங்கர் லாரிகளை நிறுத்தி, அவற்றில் இருந்த பாலை எடுத்துவிட்டு அதற்கு நிகராக தண்ணீர் சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது அண்மையில் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக திருவண்ணா மலையைச் சேர்ந்த சுரேஷ், சத்திய ராஜ், ரமேஷ், வேலூர் ராணிப் பேட்டையைச் சேர்ந்த குணா, முருகன், சுரேஷ், அன்பரசன் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் திண்டிவனம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள பால் கூட்டுறவு ஒன்றிய அலுவலகங்களில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக இருந்த சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகி வைத்தியநாதனை(44) கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் வைத்து சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வைத்திய நாதனை உளுந்தூர்பேட்டை 2-வது தலைமை குற்றவியல் நீதிபதி முத்துராமன் முன்பு சனிக்கிழமை மாலை ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து, வருகிற அக்டோபர் 1-ம் தேதி வரை விழுப்புரம் கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் வைத்திய நாதனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி டிஎஸ்பி வேலவன் பிள்ளை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி குமார் சரவணன் வருகிற 29-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். மேலும் அன்று மாலை 5.30 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
துன்புறுத்தக்கூடாது
சிபிசிஐடி போலீஸார் மனு மீதான விசாரணையின்போது தன்னை போலீஸார் காவலில் அனுப்ப வைத்தியநாதன் ஆட்சேபனை தெரிவித்தார். மேலும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தினமும் இரண்டு முறை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டும் என்றார். அதற்கு பதில் அளித்த நீதிபதி தங்களின் உடல் நிலையை போலீஸார் பார்த்துக்கொள்வார்கள் என்றும் மேலும் விசாரணையின்போது போலீஸார் வைத்தியநாதனை துன்புறுத்தகூடாது என்று போலீஸாருக்கு அறிவுறுத்தினார்.