Published : 12 Sep 2014 11:59 AM
Last Updated : 12 Sep 2014 11:59 AM

கோயம்பேடு மார்க்கெட்டில் 600 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: ரூ.50 ஆயிரம் வசூல்

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வந்த 600 கடைகளை கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு வியாழக்கிழமை அகற்றியது. ஆக்கிரமிப்பு கடைக்காரர் களிடமிருந்து ரூ.50 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பூ, காய், கனி மார்க்கெட்டுகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவ்வளாகத்தில் நுழைவு வாயில்கள், சர்வீஸ் சாலைகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை பலர் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருவதால், மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழுவின் முதன்மை நிர்வாக அலுவலர் பாஸ்கரனுக்கு புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில், அவரது முன்னிலையில் மார்க்கெட் நிர்வாகக் குழு உதவி செயற்பொறியாளர் சிவலிங்கம் மற்றும் உதவிப் பொறியாளர் ராஜன்பாபு தலைமையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது நுழைவு வாயில் எண். 7 முதல் 14 வரையிலான பகுதிகள் மற்றும் சர்வீஸ் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கடைகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகளை நடத்த முற்பட்டால் காவல்துறை மூலம் குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்று மார்க்கெட் நிர்வாகக் குழு சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

14-வது நுழைவு வாயிலை பூட்டிய ஆக்கிரமிப்பாளர்கள்

மார்க்கெட் நிர்வாகக் குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மார்க்கெட்டின் 14-வது நுழைவு வாயிலை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் பூட்டி, ஊழியர்களை உள்ளே வர விடாமல் தடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வாயிலைத் திறந்தார். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

500 கிலோ தக்காளி பறிமுதல்

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கிடங்கு உள்ள பகுதியில் தக்காளியை ஏற்றி வரும் லாரிகள் தக்காளிகளை இறக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வந்த தக்காளி கடைகளும் அகற்றப்பட்டன. சுமார் 500 கிலோ தக்காளி பறிமுதல் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x