Published : 23 Mar 2018 09:54 AM
Last Updated : 23 Mar 2018 09:54 AM

அபராதம் கட்டியதற்கு ரசீது கொடுக்காததால் போக்குவரத்து போலீஸாருடன் வாகன ஓட்டிகள் மோதல்: சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

அபராதம் கட்டியதற்கு ரசீது கொடுக்காத போக்குவரத்து உதவி ஆய்வாளரை எதிர்த்து இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக திரண்ட வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீஸாரிடம் மோதலில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வேளச்சேரி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ஆர்.ராஜேஷ் (25). இவர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள மருந்துக் கடைக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றதால், போக்குவரத்து உதவி ஆய்வாளரான கார்த்திகேய பாண்டியன் என்பவர் ராஜேஷை வழிமறித்துள்ளார். ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு ரூ.100 அபராதம் விதித்துள்ளார். ஆனால், அதற்கான ரசீதை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த ராஜேஷ், அபராதம் கட்டியதற்கான ரசீதைக் கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர், ராஜேஷை தாக்கியதாக தெரிகிறது. இதைக் கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் கார்த்திகேய பாண்டியனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“ரசீது கேட்ட இளைஞர் மீது ஏன் தாக்குதல் நடத்துகிறீர்கள்? எதற்காக அடித்து பணம் பிடுங்குகிறீர்கள்? உங்களுக்கு தினமும் இதே வேலைதான். உங்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது, அப்படி இருந்தும் ஏன் இப்படி அலைகிறீர்கள்?” என்று அங்கு நின்றிருந்த போக்குவரத்து போலீஸாரிடம் வாகன ஓட்டிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர். இதனால் போக்குவரத்து போலீஸார் அங்கிருந்து நைசாக நழுவினர். பின்னர் சுதாரித்துக் கொண்டு வாகன ஓட்டிகளை அங்கிருந்து கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தினர்.

காவல் ஆணையர் உத்தரவு

தன் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளரிடம் ராஜேஷும் தகராறில் ஈடுபட்டார். சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் கார்த்திகேய பாண்டியனின் கையை பின்புறமாக இறுக்கி பிடித்துக் கொண்டார். அவரிடமிருந்து சக போக்குவரத்து போலீஸார் கார்த்திகேய பாண்டியனை மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிகழ்வை அங்கு நின்றவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அது தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி யார் மீது தவறு உள்ளது என அறிக்கை அனுப்ப போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விசாரணை தொடங்கி யுள்ளது.

இதற்கிடையில், ராஜேஷின் தந்தை ராஜேந்திரன் வேளச்சேரி போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், ‘எனது மகன் கொஞ்சம் உடல் நலம் பாதிக்கப்பட்டவர். அவர் செய்த தவறுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

வாகன ஓட்டிகள் மீது வழக்கு

போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திகேய பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ராஜேஷ் மற்றும் 7 வாகன ஓட்டிகள் மீது வேளச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திகேய பாண்டியன் மீது எந்த தவறும் இல்லை எனவும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x