Published : 12 Mar 2018 08:48 AM
Last Updated : 12 Mar 2018 08:48 AM

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி: ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

கால அவகாசம்

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க 9-ம் தேதியும், ஆன்லைனில் தேர்வுக் கட்டணம் செலுத்த 10-ம் தேதியும் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி சிபிஎஸ்இ வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் 13-ம் தேதி இரவு 11.50 மணி வரை செலுத்தலாம்” என்று தெரிவித்திருந்தது.

இந்த ஆண்டு முதல் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவர்களும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திறந்தநிலை கல்வி நிறுவனத்தின் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களாக பிளஸ் 2 படிப்பவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை என்று முன்பு இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, அந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களும் விண்ணப்பித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x