Published : 26 Sep 2014 10:55 AM
Last Updated : 26 Sep 2014 10:55 AM

ஆரோக்கிய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு, மருத்துவம்: பள்ளிக் குழந்தைகளிடமிருந்து தொடக்கம் - நம்பிக்கையை விதைக்கும் இயற்கை வாழ்வியலாளர்

அன்றாடம் நம்மைச் சுற்றி அரங் கேறும் அம்சங்களில் சோர்வடையச் செய்பவையே அதிகம். அத்திப் பூத்தாற்போல ஒருசிலர் நம்பிக் கையை விதைப்பார்கள். அவர்களில் ஒருவர்தான் தங்க.சண்முகசுந்தரம். இயற்கை வழியில் கல்வி, உணவு, மருத்துவம் என அரசுப் பள்ளி மாணவர்களை மையமாக வைத்து இயங்கி வருகிறார் இவர்.

அரியலூர் மாவட்டம் கீழக் காவட்டாங்குறிச்சி தங்கராஜு மகன் சண்முகசுந்தரம் படித்தது எம்பிஏ. தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தவரின் தாய்க்கு வந்த நோயும் அவரை குணப்படுத்த எதிர்கொண்ட சிரமங்களும் வாழ்க்கையை மாற்றிப்போட்டது. மருத்துவமனைகளின் படியேறி நம்பிக்கை இழந்தபோது, நண்பர் பரிந்துரைத்த இயற்கை மருத்துவ சிகிச்சை புத்துயிர் தர, நன்றிப் பெருக்கில் வங்கிப் பணியை உதறி தன் வாழ்க்கையை இயற்கை வழியில் மடைமாற்றிக் கொண்டார்.

பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளி மாணவர்களை குறிவைத்து அவர் இயங்க ஆரம்பித்தது அதன் பிறகுதான். “அம்மா குணமடைந்ததைக் காட்டியே என் வீட்டை இயற்கை வாழ்வியலுக்கு திருப்பினேன். எங்களுக்கு கிடைச்ச பலாபலனை அக்கம் பக்கத்தினருக்கு சொன் னப்போ எல்லாரும் கேலி பண்ணு னாங்க. ஆனா என்கிட்ட டியூஷனுக்கு வந்த மாணவர்கள் ஆர்வமானாங்க. வளர்ந்த மனிதர்களை விட்டுட்டு வளரும் மாணவர்கள் பக்கம் வியூகத்தை திருப்பினேன்” என்கிறார் சண்முகசுந்தரம்.

பள்ளிக் குழந்தைகளை அணுக முதலில் அவர் ஆசிரிய சமூகத்தை வளைத்தார். ஆசிரியர்களின் பணியிடை பயிற்சி, அலுவல் சந்திப்பு மையங்களின் தேநீர் இடைவேளைகளில் மறக்காமல் ஆஜராவார் சண்முகசுந்தரம். தமிழர் பாரம்பரியம், சித்த மருத்துவம், இலக்கியம், மருத்துவ ஆராய்ச்சி என சகலங்களையும் தொட்டு அவர் மேற்கொள்ளும் பிரசங்கத்துக்கு ஆசிரியர்கள் வசமாவார்கள். ஒன்றிரண்டு எளிய பரிந்துரைகளில் நீரிழிவு, ரத்த அழுத்தம் என அவதிப்படும் ஆசிரியர்களுக்கு மாற்றத்தை உணர்த்தி அவர்கள் வாயிலாக பள்ளிகளில் நுழைவார்.

மாணவர்களுடனான சந்திப்புகள் கதை, பாட்டு, புதிர்கள் என்று தொடங்கும். பின்னர் பள்ளியைச் சுற்றி பாதையோரத்தில், வயல் வரப்புகளில் இருக்கும் அரிய மூலிகைகளை அடையாளம் காட்டுவார். களப்பயணத்தில் வகுப்பு பாடமும் இருக்கும் என்பதால் ஆசிரியர்கள் உதவியோடு இது நடைபெறும். பின்னர் கல்வி அதிகாரிகள் அனுமதி பெற்று ஒரு நாள் மதிய உணவு சண்முகசுந்தரம் மேற்பார்வையில் தயாராகும்.

நோ ஆயில்.. நோ பாயில்..

அதிலும் ‘நோ ஆயில்.. நோ பாயில்..’ என்பதுதான் சண்முகசுந் தரத்தின் முத்திரை நளபாகம். அந்தந்த பகுதியில் கிடைக்கும் எளிமையான காய், கனி, கீரை வகைகளில் இருந்து கலவை உணவு முதல் கட்லெட் வரை சுவையாக தயாரித்து வழங்குவார். வீட்டிலும் அம்மாவை இப்படி உணவு தயாரிக்கச் சொல்லுங்கள் என குழந்தைகளை உசுப்பேற்றுவார். வலி போக்கும் புற்று மண், செலவில்லாத கீரை உணவூட்டம், வீட்டுத் தோட்டத்தில் மூலிகைகள் என இவர் தரும் எளிய குறிப்புகள் பிஞ்சு மனதில் எளிதில் பதிந்து விளையாட்டுப் போக்கில் நடைமுறைக்கும் வருகின்றன.

இயற்கை மருத்துவ சங்கம்

அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை மாவட்ட அரசுப் பள்ளிகள் இவரது களம். இந்தப் பகுதிகளில் இயற்கை ஆர்வலர்களோடு சேர்ந்து முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார். சொந்த ஊரில் இயற்கை மருத்துவ சங்கம் என்ற அமைப்பை நடத்திவரும் சண்முகசுந்தரம் இயற்கைத் தேன், ரசாயன கலப்பில்லாத சிறுதானிய ரகங்கள் மற்றும் பனைவெல்லம் விநியோகிப்பது, தொடு சிகிச்சை மருத்துவம் என இவரது வருமானத்துக்கு பங்க மில்லை. எம்.ஃபில் படித்த மனைவி சுசிகலாவும் கணவர் வழியில் மண், வாழையிலை, நீராவி குளியல் கொண்டு அழகு சிகிச்சை அளிக்கிறார்.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகிலிருக்கும் முதுவத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை கலாவதி கூறும்போது, “7 வருட மூட்டு வலியும் மாத்திரைகளுமாக நீடித்த போராட்டத்தை ஒரு சில உணவு பழக்கம், வாழ்க்கை நடைமுறைகளை மாற்றுவதன் மூலம் வலி, மாத்திரை இரண்டையும் மறந்து 4 வருஷமாச்சு. பள்ளிக் குழந்தைகளின் பாக்கெட் ஸ்நாக்ஸ் மோகத்தையும் அவர் மாத்திட்டார். வீட்டிலேர்ந்து பழம், காய் கொண்டு வந்து சாப்பிடறாங்க. பள்ளி காலியிடத்தில் காய், கீரை, மூலிகைத் தோட்டம் போட்டிருக்கோம். பார்க்கவே நல்லாருக்கு” என்றார்.

“நான் எதையும் புதுசா கண்டுபிடிச்சு தரலை. நாம மறந்து போனதை ஞாபகப்படுத்தி வர்றேன். அவ்வளவுதான்” என எளிமையாக சொல்கிறார் தங்க சண்முகசுந்தரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x