Published : 22 Mar 2018 07:53 AM
Last Updated : 22 Mar 2018 07:53 AM

தி.மலை ஆட்சியரை கண்டித்து முற்றுகை, ரகளையில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 300 பேர் கைது: போர்க்களமாக மாறிய ஆட்சியர் அலுவலகம்

தி.மலையில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை கண்டித்து அரசு ஊழியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினரின் தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட, 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவ்வபோது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். ஆய்வு என்ற பெயரில் அரசு ஊழியர்களை மாவட்ட ஆட்சியர் தரக்குறைவாக நடத்துவதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், ஆட்சியர் கந்தசாமியைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நேற்று காலை 10.30 மணியளவில் 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பகல் 12 மணியளவில் ஆட்சியர் கந்தசாமி, ஆய்வுப் பணிக்குச் செல்வதற்காக காரில் செல்ல முயன்றார். அங்கு திரண்டிருந்த அரசு ஊழியர்கள், காரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்கள் ஆட்சியர் கார் செல்ல வழி ஏற்படுத்தினர்.

கண்ணாடி உடைப்பு

அவர் சென்ற சிறிது நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் திடீரென இரும்புத் தடுப்புகளைத் தூக்கி எறிந்து ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது, அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 50-க்கும் மேற்பட்டவர்கள் அலுவலகத்துக்குள் நுழைந்து ஆட்சியரின் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கிருந்த இ-சேவை மையத்தின் கண்ணாடியை சிலர் உடைத்தனர்.

ஆட்சியர் அறையின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னியும், வேலூர் சரக டிஐஜி வனிதாவும் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

பெண் ஊழியர் காயம்

இ-சேவை மையத்தின் கண்ணாடி உடைந்தபோது அங்கிருந்த பெண் ஊழியர் பவித்ரா காயமடைந்தார். தி.மலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பவித்ராவை ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

போராட்டம் குறித்து அரசு ஊழியர் சங்கத்தினர் கூறும்போது, ‘‘அரசு ஊழியர் சங்கத்தினருடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன் வைக்கிறோம். ஆனால், ஆட்சியர் அதை ஏற்கவில்லை’’என்றனர்.

இந்தப் பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் கேட்டபோது, ‘‘சங்கத்தில் இருப்பவர்கள் முறையாக வந்து பேசவில்லை. நிர்வாகம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். என்னைக் கண்டித்து நிறைவேற்றிய தீர்மானத்தை மாற்றிவிட்டு சந்திக்க வந்தால், நான் அவர்களுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன்.

மாவட்டத்திலுள்ள 27 லட்சம் மக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னுடைய நிர்வாகத்தை அடக்கி கையில் வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அவர்களுடன் பேச தயாராக இருக்கிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x