

சென்னையில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளிக்கு, ராஜீவ் கொலை குற்றவாளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சாலிகிராமத்தில் இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை தேசிய புலனாய்வு பிரிவு அதி காரிகள் கடந்த 10-ம் தேதி கைது செய்தனர். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதர்களுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக அருண்செல்வராசன் செயல் பட்டதை பல ஆதாரங்கள் மூலம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அருண்செல்வராசனின் செல் போன் எண்ணில் கடந்த 5 ஆண்டு களாக தொடர்பு கொண்ட அனை வரின் பட்டியலையும் அதிகாரிகள் சேகரித்துவிட்டனர். அவர்கள் அனைவரிடமும் பட்டியலில் உள்ள வரிசைப்படி விசாரணை நடந்து வருகிறது. அதேபோல அவருடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் யாரும் கைது செய்யப் படவில்லை.
இந்நிலையில் விடுதலைப் புலி கள் இயக்கத்தில் அருண்செல்வ ராசன் இருந்ததால், ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப் பட்டவர்களுக்கும் அருண்செல்வ ராசனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என்று தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.
அருண்செல்வராசன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பயனடைந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் சிறையில் அடைக்கப்பட் டிருந்த அருண் செல்வராசனை நேற்று காலையில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
இதனால் பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அருண்செல்வராசனை காவலில் எடுத்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 12-ம் தேதி மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.