Published : 25 Mar 2018 10:36 AM
Last Updated : 25 Mar 2018 10:36 AM

தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் சினிமா பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுங்கள்: தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலிடம் ரஜினிகாந்த் வேண்டுகோள்

திரைப்படத் துறையை மட்டுமே நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில், வேலைநிறுத்தப் பிரச்சினையில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிஜிட்டல் கட்டணம் குறைப்பு, திரையரங்குகள் காட்சி ஒளிபரப்பும் முறை மறு சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 16 முதல் எந்தவிதமான திரைப்படப் பணிகளும் நடக்காது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் புதிய படங்களின் படப்பிடிப்பு கடந்த 16-ம் தேதி நிறுத்தப்பட்டது. சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இப்பிரச்சினை தொடர்பாக நடிகர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் விஷால் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கேளிக்கை வரி விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தினரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன.

பிறகு, அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளும் 23-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கவுரவ செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

இமயமலையில் இருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் திரைத்துறை வேலைநிறுத்தம் குறித்து கேட்டபோது, ‘‘சினிமா துறையில் வேலைநிறுத்தம் தேவையில்லை. சினிமா துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

திரைத்துறையில் தற்போது நிலவும் பிரச்சினைகள் குறித்தும், பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் படங்களின் டிக்கெட் கட்டணத்தை மாற்றம் செய்வது பற்றியும், தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ள நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் தயாரிப்பாளர்கள் எந்த வகையில் பயன்பெற முடியும் என்பதையும் ரஜினியிடம் விரிவாக எடுத்துக் கூறினோம். அவரும் முழுமையாக கேட்டார்.

சில நாட்களில் தீர்வு

‘நல்ல திட்டமாகத்தான் இருக்கிறது. எது செய்தாலும் திரைப்படத் துறையை நம்பி வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுங்கள். பிரச்சினையை விரைவில் முடிவுக்கு கொண்டு வாருங்கள்’ என்றார். ‘அனைத்து பிரச்சினைகளுக்கும் இன்னும் சில நாட்களில் தீர்வு காணப்படும்’ என்று அவரிடம் தெரிவித்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x