Last Updated : 05 Mar, 2018 08:59 AM

 

Published : 05 Mar 2018 08:59 AM
Last Updated : 05 Mar 2018 08:59 AM

ஓய்வில்லாமல் பணியாற்றுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆயுதப்படை காவலர்கள்

ஆயுதப்படை பிரிவு காவலர்கள் மனஉளைச்சலில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வார விடுப்பு மற்றும் பணிக்கு இடையே ஓய்வு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2016 டிசம்பர் மாதம் சென்னையை அடுத்த பரங்கிமலை இணை ஆணையர் அலுவலகத்தில் ஆயுதப்படைப் பிரிவு காவலர் கோபிநாத் (23) துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல் தற்போது அருண்ராஜ் (26) என்ற ஆயுதப்படை பிரிவு காவலர் மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துள்ளார். இதுபோக புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் சில ஆயுதப்படை பிரிவு காவலர்கள் ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தாங்கள் அதிக மன உளைச்சலில் இருப்பதாக ஆயுதப்பிரிவு காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஆயுதப்படை பிரிவு காவலர் கூறியதாவது:

இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்படும் காவலர்கள் முதலில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியமர்த்தப்படுகிறோம். பெரிய அளவிலான சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணிகளுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறோம்.

இப்படி 16 சிறப்பு காவல் படை உள்ளது. இதில், 8-ம் அணி டெல்லி திகார் சிறையில் உள்ளது. 6 மாதத்துக்கு ஒரு முறை வெவ்வேறு மாவட்டங்களுக்கு நாடோடி போல் அலைகிறோம். சில ஆண்டுகளுக்கு பிறகு அங்கிருந்து ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்படுகிறோம்.

முதல்வர், நீதிபதிகள், வங்கிகள், விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது முக்கிய பணி. குற்றவாளிகளை நீதிமன்றங்களுக்கும் சிறைச்சாலைக்கும் அழைத்துச் செல்வோம். கொலை, கொள்ளை நடந்தாலும் பாதுகாப்புக்காக போலீஸ் அதிகாரிகள் ஆயுதப்படை பிரிவு காவலர்களைத்தான் முதலில் அனுப்பி வைப்பார்கள்.

பிடித்த ஆயுதப்பிரிவு காவலர்களுக்கு எளிமையான பணியும் பிடிக்காத காவலர்களுக்கு கடினமான பணியும் சில நேரங்களில் ஒதுங்கப்படுகிறது. பெண் காவலர்களுக்கும் இதே நிலைதான். அவர்களுக்கு பணியின்போது முறையான கழிப்பிட வசதிகூட செய்து கொடுப்பது இல்லை.

தற்போது தற்கொலை செய்து கொண்ட அருண் ராஜுக்கு 4 மணி நேரம் வேலை 8 மணி நேரம் ஓய்வு. ஓய்வு அதிக நேரம் ருந்தாலும் இதை குடும்பத்தார், நண்பர்களுடன் உபயோகம் உள்ளதாக செலவழிக்க முடியாது. மொத்தமாக வேலை வாங்கி விட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஓய்வுக்காக மொத்தமாக மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் வார விடுப்பு கிடையாது. விடுப்பு எடுப்பதும் எளிதான காரியம் அல்ல. எனவே வார ஓய்வு, எல்லோருக்கும் சமமான பணி, பயன்படும் வகையில் பணி ஓய்வு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, ஆயுதப்பிரிவு துணை ஆணையர் சவுந்தரராஜன் கூறும்போது, “சென்னையில் 6,500 ஆயுதப்பிரிவு காவலர்கள் உள்ளனர். இவர்களில் 1500 பேர் பெண்கள். அனைவருக்கும் சமமான பணி ஒதுக்கப்படுகிறது.

மன அழுத்தம் குறைப்பதற்கு வாரந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. யாருக்கேனும் குறை இருந்தால் எங்களிடம் வாய்மொழியாகவும் எழுத்து பூர்வமாகவும் தெரிவிக்கலாம். டிஜிபியிடம் நேரடியாகவும் புகார் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x