Published : 03 Mar 2018 08:28 AM
Last Updated : 03 Mar 2018 08:28 AM

போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரம்: மத்தியஸ்தர் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக சென்னையில் இன்று மத்தியஸ்தர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இதையடுத்து, மத்தியஸ்தராக இருக்கும் பத்மநாபன் தனது அறிக்கையை வரும் 9-ம் தேதி சமர்பிக்கவுள்ளார்.

தமிழக போக்குவரத்து ஊழியர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தம் போடுவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பில் 2.57 மடங்கு ஊதிய உயர்வு கேட்ட நிலையில், 2.44 மட்டுமே தர முடியும் என நிர்வாகம் உறுதியாக அறிவித்தது.

இதைக் கண்டித்து, போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த ஜனவரி 4 முதல் 11 வரை 8 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நீதிமன்றம் தலையிட்டு பேசி சுமுக முடிவெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்தது.

இந்நிலையில் மத்தியஸ்தர் பத்மநாபன் முன்னிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய பேரிடர் நிர்வாக கூட்டரங்கில் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. போக்குவரத்து கழக அரசு அதிகாரிகளும், தொழிற்சங்கங்கள் தரப்பில் 46 தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்று வருகின்றனர்.

அதிகளவில் தொழிற்சங்கங்களின் ஆதரவை கொண்டு போடப்பட்ட 13-வது ஒப்பந்தம் செல்லும் என்றும், 2.44 மடங்கு ஊதிய உயர்வை இறுதிசெய்ய வேண்டுமென்றும் நிர்வாகம் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்கங்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அதிகளவிலான தொழிலாளர்கள் தங்களின் பக்கம் இருப்பதாகவும், 2.57 மடங்கு ஊதிய உயர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகிறது. இருதரப்பு கருத்துகளையும் கேட்டு வரும் மத்தியஸ்தர் பத்மநாபன், இன்று பேச்சுவார்த்தை நடத்தி, வரும் 9-ம் தேதி அறிக்கையை சமர்பிக்கவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x