Published : 14 Mar 2018 10:59 AM
Last Updated : 14 Mar 2018 10:59 AM

சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை எதிர்த்து சென்னையில் நேற்று எல்பிஎப், சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டன.

மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த சட்டதிருத்த மசோதா நிறைவேறவில்லை. இந்நிலையில், வரும் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோட்டார் வாகன தொழிலில் ஈடுபட்டுள்ள அகில இந்திய சங்கங்கள் மார்ச் 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி, அந்தந்த மாநில முதல்வரிடம் மனு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டன. அதன்படி, தமிழக தலைநகரான சென்னை யில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க கொடிகளுடன் கலந்து கொண்டவர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

சேப்பாக்கத்தில் நடைபெற்றஇந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (எல்பிஎப்), அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் (சிஐடியூ), அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கங்கள் கூட்டமைப்பு, அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம், தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் சண்முகம் பேசும்போது, “இதுபோன்ற சட்டத் திருத்தம் சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் நிறைந்த வெளிநாடுகளுக்கே பொருந்தும். குறுகிய சாலைகள், குண்டும் குழியுமான சாலைகள் கொண்ட நம் நாட்டுக்கு இந்த சட்ட திருத்தத்தை நடைமுறைப் படுத்த இயலாது. அதையும் மீறி இந்த சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்ற முற்பட்டால், அன்றைய தினம் நாடு முழுவதும் ஒரு வாகனத்தைக்கூட இயக்காமல் மத்திய அரசுக்கு ஒட்டுமொத்த எதிர்ப்பைக் காட்டு வோம்” என்றார்.

சிஐடியூ மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசும்போது, “இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். `ஊபர்’, `ஓலா’ போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே இருக்கும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களையே மூட வேண்டிய நிலை ஏற்படும். எனவே, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தொழிலாளர்கள் கொத்தடிமையாக்கப்படுவதைத் தடுக்க போராடுவோம்” என்றார்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும், தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x