Published : 22 Mar 2018 09:04 PM
Last Updated : 22 Mar 2018 09:04 PM

2015 டிசம்பர் வெள்ளம் குறித்த தன் தோல்வியை மூடி மறைக்கவே பேரவையில் அறிக்கையை வைக்க அதிமுக அரசு தயங்குகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

2015 டிசம்பர் வெள்ள மீட்புப் பணிகளில் தன் தோல்வியை மூடி மறைப்பதற்காகவே சட்டப்பேரவையில் அறிக்கையை வைக்க அதிமுக அரசு தயங்குகிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சென்னை மக்களை கடுமையாக பாதித்த 2015 டிசம்பர் வெள்ளம் குறித்த சிறப்பு தணிக்கை அறிக்கையை உடனே சட்டப்பேரவையில் வைத்திட முதல்வருக்கு தமிழக ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை மக்களை பேரிடருக்குள்ளாக்கிய 2015 டிசம்பர் வெள்ளத்தில் அதிமுக அரசின் செயல்பாடு குறித்த செயல்பாட்டு தணிக்கை அறிக்கை 21.6.2017 அன்றே அரசுக்கு அனுப்பப்பட்டும், இதுவரை அந்த அறிக்கை சட்டபேரவையில் வைக்கப்படாதது குறித்து இன்றைய தினம் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கேள்வி எழுப்பியதற்கு, 'அது கணக்கு தணிக்கை அறிக்கை இல்லை' என்பதாலும், 'செயல்பாட்டு தணிக்கை அறிக்கையை சட்டப்பேரவையில் வைப்பதற்கு முன் நிகழ்வுகள் ஏதுமில்லை' என்றும் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சென்னை பெரு வெள்ளம் மிக மோசமான பேரிடர் என்பதை நாடு அறியும். அந்த பேரிடரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கின. எண்ணிலடங்காதோர் தங்களின் உடமைகளை இழந்து நிவாரண மையங்களில் பல நாட்கள் தவிக்க நேரிட்டது. செம்பரம்பாக்கம் ஏரி திடீரென்று திறந்து விடப்பட்டு சென்னை புறநகரத்தின் பல பகுதிகள் செயற்கையாக மூழ்கடிக்கப்பட்ட துயரம் நிகழ்ந்தது. 1.12.2015 முதல் 5.12.2015 வரை சென்னை விமான நிலையமே மூடப்பட்டு, அந்த வெள்ளம் சென்னையின் துயரம் என்றே நாடு பேரதிர்ச்சியுடன் உணரப்பட்டது.

இந்த டிசம்பர் வெள்ளம் தொடர்பான மீட்புப் பணிகளில் கவனம் செலுத்தாமல் அந்த நேரத்தில் ஸ்டிக்கர் ஒட்டி அரசு உதவிகளை வழங்குவதிலும், வேறு பொது நல அமைப்புகள் அளிக்கும் பொருளுதவிகளைக் கூட பறித்து 'அம்மா ஸ்டிக்கர்' ஒட்டிய அவலம் அரங்கேறி மக்கள் முகம் சுளித்தார்கள். பெருவெள்ளத்தை சமாளிப்பதிலும், மீட்புப் பணிகளை மேற்கொண்டதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததிலும் அதிர்ச்சியளிக்கும் குறைபாடுகளைக் கண்டறிந்த இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை தலைவர் இது தொடர்பாக சிறப்பு தணிக்கை அறிக்கை ஒன்றை 21.6.2017 அன்றே கொடுத்து விட்டார் என்பதை நிதியமைச்சர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அந்த அறிக்கை தயாராகும் முன்பு அரசுக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டு பல்வேறு கட்டங்களில் விவாதங்கள் நடைபெற்றதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதன் பிறகுதான் வரைவு செயல்பாட்டு தணிக்கை அறிக்கையை சட்டப்பேரவையில் வைக்கப்படுவதற்காக இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த அறிக்கையை சட்டப்பேரவையில் வைத்து, பொதுக்கணக்கு குழுவிற்கு அனுப்பி விவாதித்து, அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு அரசின் அரசியல் சட்டக் கடமையாகும். இதைத்தான் அரசியல் சட்டப் பிரிவு 151(2) மிகத் தெளிவாக கூறுகிறது. அதன் அடிப்படையில்தான் தமிழ்நாடு சட்டப் பேரவை விதிகள் 207(1) ன்படி அறிக்கையை ஆய்வு செய்யும் பொது கணக்குக் குழுவின் அதிகாரங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆனால், 'செயல்பாட்டு தணிக்கை அறிக்கை' கணக்கு தணிக்கை அறிக்கை அல்ல என்ற சொத்தை வாதத்தை நிச்சயம் ஏற்றுக் கொள்ள இயலாது. மாநில அரசு நிதி மற்றும் மத்திய அரசு அளித்த பேரிடர் நிதி எல்லாம் செலவு செய்துதான் டிசம்பர் வெள்ளத்திற்கான மீட்புப் பணிகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டன. ஆகவே இந்த செயல்பாட்டு தணிக்கை அறிக்கை என்பதை கணக்கு தணிக்கை அறிக்கையாகவே அரசு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அணுகுமுறைதான் மாநிலத்தின் கணக்குகளை ஆய்வு செய்ய இந்திய தணிக்கை துறைக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியல் சட்ட அதிகாரத்தின் சீரிய நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமையும்.

அது மட்டுமின்றி, அது கணக்கு தணிக்கை அறிக்கையா அல்லது செயல்பாட்டு தணிக்கை அறிக்கையா என்பதை முடிவு செய்ய வேண்டிய இடம் சட்டப்பேரவைதானே தவிர, அரசு அதிகாரிகள் அல்ல. அவர்களுக்குள்ளாகவே வைத்துக்கொண்டு கடிதப் போக்குவரத்து நடத்துவதும், சட்ட ஆலோசனைகள் கேட்பதும் சட்டப்பேரவை ஜனநாயக நெறிமுறைகளுக்கு உகந்ததல்ல. ஆகவே சட்டப்பேரவையில் வைப்பதற்காக அனுப்பப்பட்ட வரைவு அறிக்கையை சட்டப்பேரவையில் வைத்திருக்க வேண்டிய தனது அரசியல் சட்டக் கடமையிலிருந்து இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மையான நிலை. 'சட்ட ஆலோசனை கேட்டிருக்கிறோம்' என்றெல்லாம் கூறி 2015 டிசம்பர் வெள்ள மீட்புப் பணிகளில் அதிமுக அரசின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவே சட்டப்பேரவையில் அறிக்கையை வைக்க அதிமுக அரசு தயங்குகிறது.

ஆகவே, 2017- ஜூன் மாதமே அரசுக்கு கிடைக்கப்பெற்று விட்ட 'சிறப்பு தணிக்கை அறிக்கையை' தமிழக ஆளுநருக்கு அனுப்பி, சட்டப்பேரவையில் வைப்பதற்கான நடவடிக்கையை நிதியமைச்சர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்த அறிக்கையின் நகல் ஒன்று ஆளுநரின் செயலாளருக்கும் அனுப்பப்பட வேண்டும் என்பது இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையின் கடமை என்பதால், தமிழக ஆளுநர் சென்னை மற்றும் புறநகர் மக்களை கடுமையாக பாதித்த வெள்ளம் குறித்த சிறப்பு தணிக்கை அறிக்கையை உடனே சட்டப்பேரவையில் வைத்திட முதல்வருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x