Published : 19 Mar 2018 07:46 AM
Last Updated : 19 Mar 2018 07:46 AM

திமுக ஆய்வு கூட்டம் ஏப். 2-ல் மீண்டும் தொடக்கம்

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுக நிர்வாகிகளின் கள ஆய்வுக் கூட்டம், ஏப்ரல் 2-ம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சிப் பணிகள், நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி, கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் திமுகவின் ஊராட்சி செயலாளர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரையிலான நிர்வாகிகளுடன் அவர் கள ஆய்வு மேற்கொண்டார்.

மார்ச் 14-ம் தேதி வரை 27 நாட்களில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், விழுப்புரம், வேலூர் என திமுக கட்சி ரீதியான 52 மாவட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் கள ஆய்வை நடத்தி முடித்தார்.

இதற்கிடையே, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 15-ம் தொடங்கியதால் மீதமுள்ள 13 மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 22-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. திமுகவின் ஈரோடு மண்டல மாநாடு வரும் 24, 25 தேதிகளில் நடக்கவுள்ளது.

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட கள ஆய்வுக் கூட்டம், ஏப்ரல் 2 முதல் 11-ம் தேதி வரை நடக்கும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்தியில், “ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம், ஏப்ரல் 2-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 2-ம் தேதி கடலூர் கிழக்கு, மேற்கு, 3-ம் தேதி கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, 5-ம் தேதி திருச்சி வடக்கு, தெற்கு, 6-ம் தேதி திருவள்ளூர் வடக்கு, தெற்கு, 9-ம் தேதி சென்னை மேற்கு, தெற்கு, 10-ம் தேதி சென்னை தெற்கு, வடக்கு, 11-ம் தேதி காஞ்சிபுரம் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

கள ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு கட்சியில் பல மாற்றங்களை செய்ய ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். குறிப்பாக, கள ஆய்வின்போது அதிகமான புகார்கள் கூறப்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x