Published : 25 Mar 2018 10:39 AM
Last Updated : 25 Mar 2018 10:39 AM

காவிரி மேலாண்மை வாரியத்தில் கூடுதல் உறுப்பினர்கள்: கர்நாடகா கோரிக்கையை ஏற்கிறதா மத்திய அரசு?

 உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை தயாரித்துள்ளது. அதில்,  காவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு எதிராக, கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியத்தில் கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம், கர்நாடகம் இடையிலான காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஒதுக்கிய 192 டிஎம்சி நீரை 177.25 டிஎம்சி நீராகக் குறைத்து பில்லிகுண்டு அணையில் இருந்து திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. அதேசமயம், கர்நாடக மாநிலத்துக்கு கூடுதலாக 14.75 நீரை ஒதுக்கீடு செய்தது. அதாவது கர்நாடக மாநிலத்துக்கு காவிரி நடுவர் மன்றம் 270 டிஎம்சி நீர் ஒதுக்கிய நிலையில் இப்போது 284.75 டிஎம்சி நீர் ஒதுக்கியது.

பெங்களூரு மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கூடுலாக 4.75 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்தது. அதேசமயம் கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என்ற அளவில் மாற்றமும் செய்யவில்லை. அதேசமயம் இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்பாதல், அடுத்த 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்படவில்லை என கர்நாடகா வாதிட்டு வருகிறது. திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று மட்டுமே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் கர்நாடகா கூறி வருகிறது.

இந்த நிலையில் மார்ச் 9-ம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதில் காவிரி மேலாண்மை வாரியத்தில் கூடுதலாக சில உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது. கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கர்நாடகா ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு கூடுதல் உறுப்பினர்களை இடம் பெறச் செய்வதன் மூலம் கர்நாடகாவை சமரசம் செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி காவிரி மேலாண்மை வாரியம் செயல்பாட்டிற்கு வரும் வரை கர்நாடக நீர்வளத்துறையே முடிவெடுத்து மற்ற மாநிலங்களுக்கு தண்ணீரை திறந்து விடலாம் எனவும் மத்திய நீர்வளத்துறை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், காவிரி மேலாண்மை வாரியம் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய நீர்வளத்துறை வரைவு அறிக்கை தயாரித்துள்ளது. இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கு முன்பாக மற்ற அமைச்சரகங்களுக்கு வரைவு அறிக்கையை அனுப்பி நீர்வளத்துறையின் சார்பில் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

நடுவர்மன்ற உத்தரவுக்கு எதிராக....

காவிரி மேலாண்மை வாரியம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதை, காவிரி நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் தெளிவாக கூறியுள்ளது.

அதன்படி, ‘‘காவிரி மேலாண்மை வாரியத்தில், முன்று முழுநேர உறுப்பினர்களும், மூன்று பகுதி நேர உறுப்பினர்களும் இடம் பெற வேண்டும். அதன்படி கர்நாடகா, தமிழகம், கேரளா புதுச்சேரி சார்பில் தலா ஒரு உறுப்பினர் இடம் பெற வேண்டும். மற்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் சார்பில் நிரப்பப்பட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் எந்தந்த மாநிலங்களுக்கு எப்போதெல்லாம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதை முடிவு செய்து அறிவிக்கும். காவிரி ஒழுங்குமுறை ஆணையம் இதனை செயல்படுத்த வேண்டும்’’ என காவிரி நடுவர் மன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x