Last Updated : 30 Mar, 2018 12:22 PM

 

Published : 30 Mar 2018 12:22 PM
Last Updated : 30 Mar 2018 12:22 PM

மதுரையில் 120 ஜோடிக்குத் திருமணம் நடத்தி வைத்த முதல்வர், துணை முதல்வர்: பந்திக்கு அலைமோதிய பொதுமக்கள்

மதுரையில் அதிமுக அம்மா பேரவை சார்பில் 120 ஜோடிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் திருமணம் நடத்திவைத்தனர். வருவாய்த்துறை அமைச்சரும், மாநில அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் நடந்த இந்த விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கு மதுரை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் லாரி, குட்டியானை போன்ற திறந்த வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர். முதல்வர் சார்பில் மோதிரம், துணை முதல்வர் சார்பில் தாலி என திருமண தம்பதியருக்கு மொத்தமாக 70 விதமான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், வந்திருந்தவர்களுக்கும் வேட்டி, சேலை, அண்டா போன்றவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கூட்டத்தினர் அனைவருக்கும் கல்யாண விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கூட்டத்தைத் தக்க வைப்பதற்காக முதல்வர் பேசி முடிக்கும் வரையில் பந்தி ஆரம்பிக்கக்கூடாது என்று நிர்வாகிகள் கூறிவிட்டனர். இதனால், ஒரே நேரத்தில் 50 ஆயிரம் அமர்ந்து சாப்பிடும் அளவுக்குப் மேஜை, நாற்காலியுடன் பந்தல் இருந்தபோதிலும் அவர்களால் சாப்பிட முடியவில்லை. அந்தப் பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு மக்கள் உணவருந்தச் சென்றனர். கூட்ட நெரிசலில் முதியோர்களும், பெண்களும் சிக்கி மிதிபட்டனர். 2 பெண்களின் தங்கச்சங்கலிகள் பறிபோயின. பத்துக்கும் மேற்பட்டோர் பர்ஸ் திருட்டுப்போனது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த லேசான தடியடியும் நடத்தப்பட்டது.

சாகலைன்னுதான் சொல்றாங்க...

பணம், அண்டா தருகிறோம் என்று நிகழ்ச்சிக்கு ‘அழைத்து’வரப்பட்ட பெண்களில் பலருக்கு, திருமணத்தை நடத்தி வைப்பவர் யாரென்றெ தெரியவில்லை. முதல்வர்தான் நடத்தி வைக்கிறார் என்று சொல்லிக்கொடுத்தாலும், முதல்வரின் பெயர் அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு சில பெண்கள் ஜெயலலிதாதான் திருமணத்தை நடத்தி வைக்கிறார் என்று சொன்னார்கள். ஜெயலலிதா இறந்துவிட்டாரே என்று கேட்டபோது, இல்ல, சாகலைன்னுதான் சொல்றாங்க என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x