Last Updated : 21 Mar, 2018 06:57 PM

 

Published : 21 Mar 2018 06:57 PM
Last Updated : 21 Mar 2018 06:57 PM

மத்திய அரசின் வகுப்புவாதக் கொள்கையின் அடையாளமே ரத யாத்திரை: தா.பாண்டியன்

மத்திய மோடி அரசின் வகுப்புவாதக் கொள்கையின் ஒரு அடையாளம்தான் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் குற்றம் சாட்டினார். அரசியல் ரீதியில் இந்தியாவில் தமிழகம் ஒரு பகுதிதானா என்பதற்கு பதில் தேடுவோம் எனவும் குறிப்பிட்டார்.

புதுச்சேரி அருகே வில்லியனூர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு திராவிடர் கழக மகளிர் அணியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வலியுறுத்தி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு திமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தேசிய நிர்வாக்குழு உறுப்பினர் தா. பாண்டியன் பேசியதாவது: தமிழ் அடையாளங்களை அழிப்பதில் தீவிரமாக உள்ளனர். நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு பிரச்சினை, நீதிமன்ற மொழியாக தமிழ் கொண்டு வருவது போன்ற பல விஷயங்களை உதாரணமாகக் கூறலாம். தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகிறது. முன்பு ரத யாத்திரை பாபர் மசூதி இடிப்பில் முடிந்தது. தற்போதைய ரத யாத்திரை நாடு முழுவதும் கலவரத்தையும், ரத்தக்களரியையும் உருவாக்குவதற்கும்தான்" என்று குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘’பாஜக மோடி தலைமையில் ஆட்சி அமைத்ததில் இருந்து வகுப்புவாதக் கொள்கைகளை அரசியல் பின்புலத்தோடு அதிகாரத்தைப் பயன்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவர பார்க்கிறது. அதன் ஒரு அடையாளம்தான் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை.

இந்த ரத யாத்திரை மோடி ஆட்சியை விளக்குவதற்காகவா? அல்லது பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சியை அழிப்பதற்காகவா என கேள்வி எழுகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தினை மத்திய அரசு அமைக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டுமல்ல அரசியல் ரீதியில் இந்தியாவில் தமிழகம் ஒரு பகுதிதானா என்பதற்கும் பதில் தேடுவோம்’’ என குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x