

பூங்காவில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டு மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மேயர் சுந்தர் ராவ் பூங்காவில் இளைஞர்கள் 4 பேர் நேற்று முன்தினம் மாலை மது அருந்திக் கொண்டிருந்தனர். இதுபற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் புகார் வந்தது.
கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக எழும்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பணியில் இருந்த ஏட்டு தனஞ்செழியன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தார்.
அப்போது ஏட்டு தனஞ்செழியனுக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. போதையில் இருந்த இளைஞர்கள், திடீரென தனஞ்செழியன் முகத்தில் தாக்கினர். அதில், அவரது உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. அந்த வழியாக சென்ற சிலர், இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் ஏட்டு மீது தாக்குதல் நடத்திய 4 இளைஞர்களையும் பிடித்து எழும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயம் அடைந்த தனஞ்செழியன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பிடிபட்ட இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் புரசைவாக்கம் பாலசந்திரன், பட்டாளம் யுவராஜ், கொருக்குப்பேட்டை பிரவீன்குமார், பிரின்ஸ் என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.