Published : 06 Mar 2018 10:36 AM
Last Updated : 06 Mar 2018 10:36 AM

இறந்ததாக கருதி தகனம் செய்யப்பட்ட பெண் கடைவீதியில் திரிந்ததால் பரபரப்பு

கும்பகோணம் அருகே இறந்து போனதாகக் கருதி மயானத்தில் தகனம் செய்யப்பட்ட பெண், கடைவீதியில் நேற்று உயிரோடு சுற்றித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருபுவனம் தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). இவர் எலெக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆஷா (42) என்பவருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு விக்னேஸ்வரன் (22) என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், ஆஷாவின் மனநலம் பாதிக்கப்பட்டதால் 13 ஆண்டுகளுக்கு முன் அவரை ராமச்சந்திரன் விவாகரத்து செய்துவிட்டு மகன் விக்னேஸ்வரனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆஷா, திருபுவனம் கடைவீதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில், கடந்த மாதம் 26-ம் தேதி திருபுவனம் பெட்ரோல் பங்க் அருகே ஒரு பெண் மயக்கமடைந்து விழுந்து கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், மறுநாள் (பிப்.27) திருவிடைமருதூர் போலீஸார் ராமச்சந்திரனை தொடர்புகொண்டு, உங்களின் மனைவி ஆஷா இறந்துவிட்டார். அவரது உடல் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்ளது, வந்து உடலை பெற்றுக் கொள்ளுங்கள் என்றனர். அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி உடலைப் பெற்றுக் கொள்ள மறுத்த ராமச்சந்திரன், மகனுக்காகவாவது வந்து பெற்றுச் செல்லுங்கள் என போலீஸார் கூறியதால் மகன் மற்றும் உறவினர்கள் சிலருடன் மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கு, இதுதான் ஆஷாவின் உடல் எனக் கூறி உடலை ஒப்படைத்தனர்.

உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அருகே உள்ள பெருமாண்டி சுடுகாட்டில் தகனம் செய்துவிட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை திருபுவனம் கடைவீதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆஷா சுற்றித் திரிந்ததைப் பார்த்து அப்பகுதியினர், ராமச்சந்திரன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இறந்துவிட்டார் என்று கூறி போலீஸார் ஒப்படைத்த உடல் வேறு ஒருவருடையது என்பதை அறிந்து தவறாக யாரோ ஒருவருக்கு இறுதிச் சடங்கு செய்ததை எண்ணி ராமச்சந்திரன் குடும்பத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

சரியாக விசாரணை செய்யாமல் யாரோ ஒருவரின் சடலத்தை ஆஷாவின் சடலம் எனக் கூறி ஒப்படைத்து, கவனக் குறைவுடன் நடந்து கொண்ட போலீஸார்தான் இந்த குழப்பத்துக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x