Published : 05 Mar 2018 09:05 AM
Last Updated : 05 Mar 2018 09:05 AM

அதிகாரிகள் போல நடித்து துணிகரம்: காரில் சென்ற 5 பேரை கடத்திரூ.10 லட்சம், செல்போன்கள் பறிப்பு

போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல நடித்து 5 பேரை கடத்திய கும்பல், அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம், செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பிவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல் அஜீஸ் (45), சுக்கூர் (32), முகமது சையத் (30), பிரதோஷ் (25), நயினா முகமது (30). இவர்கள் 5 பேரும் திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, பொருட்களை வாங்கி வந்து விற்கும் தொழில் செய்து வந்தனர்.

இந்நிலையில், வியாபாரம் தொடர்பாக இலங்கை செல்வதற்காக 5 பேரும் வாடகை காரில் நேற்று விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். பரங்கிமலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென மற்றொரு கார், இவர்களின் காரை வழிமறித்தது. வழிமறித்த காரில் இருந்தவர்கள் தங்களை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என கூறியுள்ளனர். பின்னர், அஜீஸ் உள்ளிட்ட 5 பேரையும் தங்கள் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர்.

சிறிது தூரம் சென்றதும், 5 பேரையும் தாக்கி மிரட்டி, அவர்கள் வைத்திருந்த ரூ.10 லட்சம், விலை உயர்ந்த செல்போன்களை பறித்தனர். தாம்பரம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது அஜீஸை மட்டும் இறக்கிவிட்டனர். அதன்பிறகு வெவ்வேறு பகுதிகளில் ஒவ்வொருவராக இறக்கி விட்டுவிட்டு கும்பல் தப்பிவிட்டது.

பணத்தை பறிகொடுத்தவர்கள், இது குறித்து பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதிகாரிகளாக நடித்து பணத்தை பறித்துச் சென்ற கும்பலை போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x