Published : 06 Sep 2014 09:50 AM
Last Updated : 06 Sep 2014 09:50 AM

டீசல் விலை தொடர் உயர்வு எதிரொலி: பெட்ரோல் கார்கள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள் - கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15% அதிகரிப்பு

நாடு முழுவதும் டீசல் விலை தொடர்ந்து அவ்வப்போது உயர்ந்து, பெட்ரோல் விலையை நெருங்கிவிட்டது. அதனால், புதிய கார் வாங்க விரும்புவோர் டீசல் கார்களை விடுத்து, பெட்ரோல் கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பெட்ரோல் கார்களின் விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலையை போல், எரிபொருள் விலையும், குறிப்பாக டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் கார்களின் விலை குறைவு, பராமரிப்புச் செலவும் குறைவு என்பதால் நடுத்தர வகுப்பு மக்கள் பெட்ரோல் கார்களையே வாங்குவது வழக்கம். ஆனால், அதற்கு ஈடாக டீசலை விட அதிக விலை கொண்ட பெட்ரோலை அவர்கள் போட்டே ஆகவேண்டிய நிலை இருந்தது.

ஆனால், டீசல் கார்களின் விலை அதிகமாக இருந்தாலும், டீசல் விலை குறைவு என்பதால் அவற்றை விரும்பி வாங்குவோரும் உண்டு. ஆனால், அண்மைக்காலமாக பெட்ரோல் விலை சற்று நிலைபெற்று, டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெட்ரோலின் விலையும், டீசலின் விலைக்குமான இடைவெளி வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது, பெட்ரோலுக்கு, டீசலுக்குமான இடைவெளி லிட்டருக்கு சென்னையில் ரூ.8.68 ஆகக் குறைந்துவிட்டது. இதனால், டீசல் கார்களை வாங்க விரும்புவோரும் கூட பெட்ரோல் கார்களுக்கு தாவி வருகின்றனர்.

பெட்ரோல் கார் விற்பனை 15% அதிகரிப்பு

இது தொடர்பாக நந்தனத்தில் உள்ள தனியார் கார் நிறுவனத்தின் மூத்த விற்பனையாளர்கள் ஜே.ராஜேஷ் மற்றும் பி.பாஷித் ஆகியோரிடம் கேட்ட போது:

விற்பனைக்காக நாங்கள் கார்களை கொண்டு வரும் போது, டீசல் கார் வகைகள் 65 சதவீதமாக இருக்கும். இதில், பெட்ரோல் கார்களின் வகைகள் 35 சதவீதம் தான் இருக்கும். முன்பெல்லாம் பெட்ரோலுடன், டீசல் விலையை ஒப்பிடும் போது, ரூ.30 வரை வித்தியாசம் இருக்கும். ஆனால், இப்போது இந்த வித்தியாசம் குறைந்து பெரிய அளவில் வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது. மேலும், பெட்ரோல் கார்களை ஒப்பிடும் போது, டீசல் கார்களின் பராமரிப்பு செலவு அதிகமாக இருக்கிறது. அதாவது, டீசல் கார்களுக்கு ஆண்டுக்கு ரூ15,000 வரை பராமரிப்பு செலவாகும். ஆனால், பெட்ரோல் கார்களுக்கு பராமரிப்பு செலவு ரூ.9,000 ஆகும்.

தற்போது, பெட்ரோல் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருக்கிறது. ஆனால், கடந்த ஒரு ஆண்டுகளாக பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டு தான் செல்கிறது.

எனவே, பெட்ரோல் விலையை கருதியும், பராமரிப்பு செலவையை ஒப்பிட்டு பார்க்கும் போது, பெட்

ரோல் கார்களை மக்கள் விரும்பி வாங்கி செல்கிறார்கள். மேலும், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, சுமார் 15% வரை பெட்ரோல் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றால், கார் நிறுவனங்கள் இந்த பிரிவின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.

பெட்ரோல் விலையை டீசல் விலை தாண்டிவிடும் அபாயம் கார் உரிமையாளர்கள் சிலரிடம் கேட்ட போது, ‘‘கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோலுடன் டீசல் ஒப்பிடும்போது சுமார் ரூ.15 வரை வித்தியாசம் இருக்கும். மேலும், அதிகம் மைலேஜ் தரும் கார்களும் டீசல் வகை கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.

எனவே, பராமரிப்பு செலவு அதிகமாக இருந்தாலும், கார் வாங்குவோர் டீசல் கார்களை விரும்பி வாங்கினர். ஆனால், இப்போது பெட்ரோல், டீசல் விலைக்கு பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.

பராமரிப்பு செலவை ஒப்பிடுகையில் பெட்ரோல் கார்களுக்கு குறைவாகவே இருக்கிறது. பெட்ரோலில் ஓடக்கூடிய அதிநவீன சொகுசு கார்களும் அதிகமாக வருகின்றன. எனவே, தற்போது பெட்ரோலில் ஓடும் கார்களை மக்கள் விரும்புகின்றனர். இப்படியே டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு சென்றால், பெட்ரோல் விலையை தாண்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை’’ என்றனர்.

அண்ணாசாலையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்பார்வையாளர் எம்.பிரகாஷிடம் கேட்ட போது, ‘‘நான் கடந்த 2 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறேன். எரிபொருளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது. அதிலும், பெட்ரோல் விலை ஏறும், இறங்கும். ஆனால், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக டீசல் விலை ரூ.56-ல் இருந்து தற்போது ரூ.62.92 ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ரூ.62 ஆக இருந்து ரூ.71.60 ஆக உயர்ந்துள்ளது. எனவே, பெட்ரோல் கார்கள் அதிகமாக வாங்க இதுவும் முக்கியமான காரணமாக இருக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x