Published : 21 Mar 2018 07:57 AM
Last Updated : 21 Mar 2018 07:57 AM

பிளஸ் 1 கணிதத் தேர்வு கடினம்: மாணவ, மாணவிகள் அதிர்ச்சி

பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. முக்கிய தேர்வாக கருதப்படும் கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய பல மாணவ-மாணவிகள் கவலை தெரிவித்தனர்.

சென்னை பள்ளி மாணவ, மாணவிகள் சிலர் இதுகுறித்து கூறும்போது, "கேட்கப்பட்டிருந்த பல கேள்விகள் புதிதாக இருந்தன. இதற்கு முன்பு அந்த கேள்விகளை நாங்கள் பார்த்ததுகூட இல்லை. பாடப்புத்தகத்தின் பின்னால் இடம்பெறும் கேள்விகளை தாண்டி புதிதாக கேள்விகள் உருவாக்கப்பட்டு கேட்டிருப்பது போன்று தெரிகிறது. வகை நுண்கணிதம் பகுதியில் ஒரு பிரிவிலிருந்து 2 மதிப்பெண், 3 மதிப்பெண், 5 மதிப்பெண் என அனைத்து கேள்விகளையும் கேட்டுள்ளனர். குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக கேள்விகள் வந்துள்ளன. ஒருசில பகுதிகளில் இருந்து ஒரு கேள்விகள்கூட வரவில்லை. மொத்தத்தில் கணித தேர்வு மிகவும் கடினம்" என்றனர்.

மேல்நிலைக்கல்வி கணித ஆசிரியர்கள் கூறியதாவது: புளு பிரிண்ட் முறையில் இல்லாமல் புதிய முறை வினாத்தாள் என்பதால் சிபிஎஸ்இ தரத்துக்கு இணையாக கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய வினாக்கள் வரவில்லை. ஒரு மதிப்பெண் கேள்வியில் பாடத்தின் பி்ன்பகுதியில் உள்ள வினாக்கள் பகுதியில் இருந்து 9 கேள்விகளே வந்துள்ளன. எஞ்சிய கேள்விகள் புதிதாக உருவாக்கப்பட்ட கேள்விகள். புளு பிரிண்ட் முறையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவர்களுக்கு இதுமாதிரியான வினாக்கள் கடினமாகத்தான் இருக்கும்.

மேலும் 5 மதிப்பெண் கேள்விகள் 3 மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டுள்ளதால் பல மாணவர்களுக்கு நேரம் போதாமல் இருந்திருக்கலாம். 5 மதிப்பெண் கேள்விகள் வகை நுண்கணிதம், தொகை நுண்கணிதம் என குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் கேட்டுள்ளனர். ஒருசில பகுதிகளில் இருந்து கேள்விகளே இல்லை. இதுவும் மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கலாம்.

கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஒருவேளை மாணவர்களை தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் நோக்கத்துக்காக கேள்விகளின் கடினத்தன்மை அதிகரிக்கப்பட்டிருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x