Published : 13 Mar 2018 08:47 PM
Last Updated : 13 Mar 2018 08:47 PM

திருமண அழைப்பிதழ் வைத்துவிட்டு திரும்பும் போது சோகம்; சூளகிரி அருகே எதிர் திசையில் பாய்ந்து கார் மீது மோதிய பேருந்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

 சென்னையில் திருமண அழைப்பிதழ் வைத்துவிட்டு பெங்களூரு திரும்பிக்கொண்டிருந்த போது  எதிரில் கட்டுப்பாட்டை இழந்து வந்த பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரு லட்சுமி நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கர், சுமதி தம்பதிகள். இவர்கள் வீட்டுத் திருமணம் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதற்காக சென்னையில் உறவினர்களுக்கு கல்யாண அழைப்பிதழ் வைக்க நினைத்தனர்.

சென்னைக்கு காரில் சங்கர், சுமதி, இன்னொரு சுமதி, குபேரன் ஆனந்த் உள்ளிட்டோர் சென்றனர். காரை டிரைவர் மணி ஓட்டிச்சென்றுள்ளார். சென்னையில் பல இடங்களில் அழைப்பிதழ் வைத்த பின்னர் சென்னையிலிருந்து நேற்று மாலை பெங்களூரு திரும்பினர்.

கார் கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே காமன்தொட்டி என்னும் இடத்தின் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கர்நாடக மாநில அரசுப் பேருந்து திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புகள் மீது மோதியது.

பின்னர் தடுப்பை உடைத்துக்கொண்டு எதிர் சாலையில் சென்ற டெம்போ மற்றும் சங்கர் குடும்பத்தினர் வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரிலிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். சிலர் காருக்குள்ளேயே நசுங்கினர்.

இதில் காரில் பயணம் செய்த சங்கர், கார் டிரைவர் மணி, சுமதி, மற்றொரு சுமதி, குபேரன் ஆகிய 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். டெம்போ ஒட்டுநர் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x