Published : 18 Mar 2018 08:26 PM
Last Updated : 18 Mar 2018 08:26 PM

சென்னையில் போலி பல்கலை. நடத்தி நூதன மோசடி: புது மாப்பிள்ளை, திருமண மண்டப உரிமையாளர் கைது

சென்னையில் போலி பல்கலைக் கழகம் நடத்தி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த திருமண மண்டப உரிமையாளர், புது மாப்பிள்ளை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொண்டித் தோப்பு ஜிந்தா தெருவைச் சேர்ந்தவர் கோபு (55). இவரது மகள் 12ம் வகுப்பு படித்து முடித்திருந்தார். அவரை பட்டப்படிப்பு படிக்க வைக்க கோபு ஆசைப்பட்டார். அப்போது, அதே பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

அதில் எம்பிபிஎஸ், பி.பி.ஏ, பி.காம், பி.ஏ உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு ஒரு ஆண்டிலேயே படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அலுவலகம் கொடுங்கையூர் விவேகானந்தா தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் உள்ள அறையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, கோபு அங்கு சென்று விசாரித்தார். அங்கு திருமண மண்டபத்தின் உரிமையாளர் அதே பகுதியைச் சேர்ந்த சந்திர சேகர் (40) இருந்தார். அவர் நான்தான் சம்பந்தப்பட்ட பல்கலையின் நிர்வாகி என்றார். மேலும், அதன் உரிமையாளர் அலெக்ஸ்சாண்டர் விஜய் (33) வெளியே சென்றிருப்பதாகவும் கூறினார்.

சிறிது நேரத்தில் அலெக்ஸாண்டர் விஜயும் அங்கு வந்தார். அவரிடம் தனது மகளை பி.ஏ படிக்க வைக்க வேண்டும் என்று கோபு தெரிவித்தார். கட்டணமாக ரூ1 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்க வேண்டும். முதல்கட்டமாக ரூ.85 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டனர். அதன்படி, கோபு ரூ.85 ஆயிரம் செலுத்தினார். ஆனால், வகுப்பு நடத்தப்படவில்லை.

இதுகுறித்து கோபு, அலெக்ஸாண்டரிடம் கேட்டார். பதில் அளித்த அவர் வகுப்புக்கு வராமலேயே வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மோசடி நடப்பதாக சந்தேகம் அடைந்த கோபு இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர்.

இதில், போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கி மோசடி செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சந்திர சேகர், அலெக்ஸாண்டர் விஜய் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மதிப்பெண் குறிப்பிடப்படாத பத்தாம் வகுப்பு முடித்ததற்கான 1,800 போலி சான்றிதழ்கள், 200 பட்டப்படிப்பு சான்றிதழ்கள், பல்கலை முத்திரைகள் 25 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கோபுபோல் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் கொடுங்கையூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x