

“மெட்ரோ ரயில் மாஸ்டர் பிளான்” தயாரித்துக் கொடுக்க சர்வதேச ஆலோசனை நிறுவனத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நியமித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இருவழித்தடங்களில் ரூ.14,600 கோடி செலவில் 45 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை 9 கி.மீ. தூரத்துக்கு விரிவாக்கம் செய்யவும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படியும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
சமீபத்தில் சென்னை வந்த மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் முதல்வர் ஜெயலலிதா இக்கோரிக்கையை நேரில் வலியுறுத்தினார். “இந்த விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படும்” என்று அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். அடுத்த 30 ஆண்டுகளில் சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பொறுப்பை சர்வதேச ஆலோசனை நிறுவனத்திடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்படைத்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் இரண்டாம் கட்டமாக மாதவரம் – கலங்கரை விளக்கம், கோயம்பேடு – ஈஞ்சம்பாக்கம், மாதவரம் – பெரும்பாக்கம் இடையே 76 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னை மாநகரில் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய மெட்ரோ ரயில் பெருந்திட்டப் பணிகள் (மாஸ்டர் பிளான்) குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு நிறுவனம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடுத்த 15 நாளில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் ஆய்வு செய்வதுடன், அப்பகுதி மக்களைச் சந்தித்து கருத்தும் கேட்கவுள்ளனர். தற்போது பயன்பாட்டில் இருக்கும் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து, பறக்கும் ரயில் போக்குவரத்து, நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படும். அடுத்த 6 மாதங்களில் இந்நிறுவனம் அறிக்கை அளிக்கும் என்றார் அவர்.
15 நகரங்களில் மெட்ரோ ரயில் பணிகள்
இந்தியாவில் டெல்லி, கொல்கத்தா, பெங்களூரில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாட்டில் முதன்முதலாக 1998-ம் ஆண்டு டெல்லியில் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கியது. அங்கு இப்போது 190 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
140 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடக்கின்றன. அடுத்த 3 ஆண்டுகளில் 330 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டம். கொல்கத்தாவில் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கும், பெங்களூரில் 16 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
டெல்லி, பெங்களூர், சென்னை, ஐதராபாத், புனே, லக்னோ, கொச்சி, நாக்பூர், ஜெய்ப்பூர், அகமதாபாத் உள்பட 15-க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடக்கின்றன. விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.