Published : 04 Mar 2018 09:42 AM
Last Updated : 04 Mar 2018 09:42 AM

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் நிதின் கட்கரி மீது அவமதிப்பு வழக்கு: முதல்வரை சந்தித்த பிறகு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமில்லை என்று கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, மத்திய அரசுக்கு நிர்பந்தம் தரவேண்டும் என்று முதல்வரை சந்தித்த பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை, நேற்று காலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், எம்பி டி.கே.ரங்கராஜன், முன்னாள் எம்எல்ஏ அ.சவுந்தரராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவர் உ.வாசுகி உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது, காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர். தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஆந்திராவில் தாக்கப்படுவது, கருணை இல்லங்களில் மனித உரிமை மீறல், விழுப்பரம் மாவட்டத்தில் ஆதிதிராவிட பெண்கள் மீதான தாக்குதல் குறித்த அறிக்கைகளை அளித்தனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு

இதுதொடர்பாக, மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் 2 வாரம் முடிந்துவிட்டது. அனைத்துக்கட்சி கூட்டம் இதற்கிடையில் நடத்தப்பட்டு, ஒரு வாரம் கடந்துவிட்டது. இதுவரை, பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை. “தொடர்ந்து மத்திய அரசிடம் வற்புறுத்தி வருகிறோம். அவர்கள் திங்கள்கிழமை பார்ப்பதாக கூறியுள்ளனர்” என்று முதல்வர் தெரிவித்தார்.

இந்தச் சூழலில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, சென்னை வந்தபோது, காவிரி மேலாண்மை வாரியத்தை தற்போது அமைப்பது சாத்தியமில்லை என்று கூறியதையும் முதல்வரிடம் கூறியுள்ளோம். ஒரு மத்திய அமைச்சரே உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பேசும் நிலை உள்ளது. எனவே, மத்திய அரசை வற்புறுத்த, மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டலாம். சட்டப்பேரவையையும் கூட்டலாம். அதற்கும் மேல், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து நிர்பந்தப்படுத்தலாம் என்பதை கட்சியின் சார்பில் வற்புறுத்தியுள்ளோம். முதல்வரும் தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. பரிசீலிக்கிறோம் என்று தெரிவித்தார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

ஊழலுக்கு கிடைத்த வெற்றி

திரிபுராவில் 25 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்தது. தற்போது ஆட்சியை இழக்கும் சூழல் உள்ளது. இது எதை உணர்த்துகிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு கே.பாலகிருஷ்ணன், ‘‘தேர்தலில் வெற்றி தோல்வி மாறி மாறி வருவது தவிர்க்க முடியாதது. 25 ஆண்டுகளாக நாங்கள் ஆட்சியில் இருந்திருக்கிறோம் என்பதே பெரிய சாதனைதான்.

ஆனால், திரிபுராவில் கடந்த 3 மாதங்களாக தேர்தலைச் சந்திக்க மத்திய அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். பல 100 கோடி ரூபாய்கள் கொட்டியுள்ளார்கள். மத்திய அமைச்சரவையே 15 நாட்கள் திரிபுராவில்தான் இருந்துள்ளது.

மின்னணு இயந்திரம் உட்பட பல முறைகேடுகள் நடந்த தகவல் உள்ளது. இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றியாகத் தெரியவில்லை. ஊழலுக்கு கிடைத்த வெற்றி’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x