Published : 22 Mar 2018 09:09 PM
Last Updated : 22 Mar 2018 09:09 PM

ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு மூலம் விஷமக் கருத்து: காவல் ஆணையரிடம் புகார்

 தனது ட்விட்டர் போலவே போலியாக உருவாக்கி விஷமக் கருத்துகளைப் பதிவு செய்து உலவ விட்ட நபர்கள் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்குச் செல்பவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம், அவர்கள் வாக்கு திமுகவுக்கு தேவை இல்லை என ஸ்டாலின் ட்விட்டர் பக்கம் போன்றே வடிவமைத்தும், அதில் கருத்துப் பதிவு செய்தும், தனியார் தொலைக்காட்சி ஒன்று ஸ்டாலின் அறிவிப்பாக இதைக் கூறுவது போல் போட்டோஷாப்பில் தயார் செய்து வாட்ஸ் அப் வலைத்தளம், முகநூலில் சிலவிஷமிகள் பரவ விட்டிருந்தனர்.

இது குறித்து பலரும் அதிர்ச்சியடைந்து ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் சென்று பார்த்தபோது அப்படி அவர் பதிவுசெய்யவே இல்லை எனத் தெரியவந்தது.

மேலும் இது குறித்து திமுக தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மு.க.ஸ்டாலின் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

போலி ட்விட்டர் மெசேஜ் குறித்து ஸ்டாலின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிமற்றும் திமுக சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் காவல் ஆணையரிடம் நேரில் அளித்தனர்.

அந்தப் புகாரில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

''சமீப காலங்களில், ஒருசில சமூக விரோதிகள் என்னுடைய 'ட்விட்டர்' பக்கம் போலவே ஒரு போலிக் கணக்கை உருவாக்கி, என்னுடைய ட்விட்டரில் நான் சொல்லாத கருத்துகளை நான் சொன்னது போலவும், தமிழ்ச் சமூகத்தில் பிரிவினையைஉண்டாக்கக்கூடிய வகையிலும் ஒரு போலிப் பதிவை உருவாக்கி, அதனை வாட்ஸ் அப், முகநூல் மற்றும் பிற சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

திமுகவின் மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்கள், எனக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும்,திமுகவின் மாண்பினைக் குலைத்திடும் வகையிலும், சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் தீய எண்ணத்துடனும்இந்த விஷமச் செயலை செய்து வருகின்றனர்.

இந்தச் சமூக விரோதிகள் இது போன்ற, நான் சொல்லாத கருத்துகளைச் சொல்லியதாகவும், அந்தக் கருத்துகளை சிலதொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது போலவும் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிவருகிறார்கள். அத்தகைய விஷமச் செய்திகளின் நகல்களை, தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க இத்துடன்இணைத்துள்ளேன். இத்தகைய செயல் தகவல் தொழில் நுட்பச் சட்டம் பிரிவு 66(A)-ன்படியும், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் படியும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே என்னுடைய ட்விட்டர் பதிவு போலவே போலியாக உருவாக்கி போலிப் பதிவுகளைப் பதிவிட்டு, நான் சொல்லாத செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டதாகச் சமூக வலைதளங்களில் போலி பதிவிட்டு வருபவர்கள், மீது உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x