Published : 14 Mar 2018 08:53 AM
Last Updated : 14 Mar 2018 08:53 AM

சாலை பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு நிறுவனத்துடன் தமிழக அரசு புதிய ஒப்பந்தம்: முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது

சாலை பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை தொடர்பாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 59,459 கி.மீ. நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத் துறையால் மேம்படுத்தப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகளில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சாலைகளை பராமரிக்கவும், போக்குவரத்தை சீரியமுறையில் மேலாண்மை செய்யவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க, சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளில் பயன்பாட்டில் உள்ள புதிய தொழில்நுட்பங்களை தமிழக அரசு பயன்படுத்துகிறது.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசின் சாலை மற்றும் போக்குவரத்து மேலாண்மை அமைப்பான ‘விக்ரோட்ஸ்’ அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த அமைப்புடன் இணைந்து நெடுஞ்சாலை திட்டமிடல், நிர்வகித்தல், சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல், சிறந்த போக்குவரத்து மேலாண்மை, சாலை பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து துறைகளின் திறன் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நவீன தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் உள்ளிட்ட சர்வதேச அளவில் நிரூபணமான சிறந்த தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படும்.

மீன்வள ஒப்பந்தம்

அதேபோல, தமிழகத்தில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாட்டுக்காக, ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்படுவதுடன், மீன்உற்பத்தியை பெருக்கவும், நிலைத்த நீடித்த மீன்வளத்தை உறுதி செய்யவும், மீன்வள ஏற்றுமதியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில் இரு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. மீன்வளத் துறை ஒப்பந்தத்தில், துறையின் செயலர் கே.கோபாலும், ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையத்தின் ஆணையர் முனிஷ் ஷர்மாவும் கையொப்பமிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் க.சண்முகம், சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ், நெடுஞ்சாலைத் துறை இயக்குநர் ஆர்.கோதண்டராமன், ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் லியோனி மல்டூன், விக்டோரியா மாநில அரசின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் பிலிப் டாலிடாக்கிஸ், விக்ரோட்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் டேவிட் ஷெல்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x