Published : 27 Mar 2018 13:15 pm

Updated : 27 Mar 2018 13:15 pm

 

Published : 27 Mar 2018 01:15 PM
Last Updated : 27 Mar 2018 01:15 PM

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டது தந்தை, மகன்: நேபாளத்தைச் சேர்ந்தவருக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு வழங்கிய அதிகாரிகள்

 விருகம்பாக்கம் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தந்தை,மகன் என்பது விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையர்கள் நேபாளத்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வந்ததை அடுத்து தனிப்படை நேபாளம் விரைந்துள்ளது.

சென்னை வங்கிக் கொள்ளையரான சபில் லால் நேபாளத்தைச் சேர்ந்தவர். அவர் சென்னை முகவரியில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவை வாங்கியுள்ளது போலீஸாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சனி, ஞாயிறு விடுமுறை தினத்தில் உள்ளுக்குள் வேலை செய்த ஊழியர் மூலமாகவே கேஸ்கட்டர் மூலம் லாக்கர் உடைக்கப்பட்டு நகைகள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டன.

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட ஊழியர் சபில் லால் சந்த் தலைமறைவானார். போலீஸார் நடத்திய விசாரணையில், தெளிவாக திட்டம் போட்டு சனிக்கிழமை இரவு அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை சாவகாசமாக சபில் லால் சந்த் தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது.

ஒருவர் மட்டுமே இந்த வேலையில் ஈடுபட முடியாது. உடன் நம்பகமான இன்னொரு நபர் சேர்ந்து தான் கொள்ளையை நடத்தி இருக்க முடியும் என்று சந்தேகப்ப்ட்டு போலீஸார் விசாரணை நடத்தியபோது சபில் லால் சந்துக்கு ஒரு மகன் இருப்பதும், அவர் அடிக்கடி வங்கிக்கு வந்து தந்தையைச் சந்தித்துச் செல்வதும் தெரியவந்துள்ளது. அவரது மகன் பெயர் திலு என தெரிய வந்தது.

இவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர். இதில் 8 காவல் ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபில் லால் சந்த் சொந்த நாடு நேபாள் என்பதால் நேபாளத்திற்கு தனிப்படை விரைந்துள்ளது. மேலும் மேற்கு வங்கம், மஹராஸ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.

ரயில் மூலமாக மற்ற மாநிலங்களுக்கு அவர்கள் தப்பியிருக்கலாம் என்பதால் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ள சி.சி.டி.வி.காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக வங்கியில் கீழறையில் தங்கியிருந்த சபில் லால் சந்துக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

சென்னையை அடுத்த வெள்ளவேடு என்ற முகவரியில் வாங்கியுள்ளார். ஆனால் அங்கு அவர் வசிக்கவே இல்லை. மனைவி போட்டோவுடன் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகள் வாங்கியது தெரியவந்தது. இது போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தைச் சேர்ந்த சபி; லாலுக்கு, அவனது மகன் திலுவுக்கும் சென்னையை அடுத்த வெள்ளவேடு முகவரியில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எப்படி வாங்கினார்கள் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே ரேஷன் கார்டு, ஆதார் கார்டைக் காண்பித்து தான் கொள்ளை அடித்த வங்கியில் சபில் லால் சந்த் கணக்கு தொடங்கியதும் தெரியவந்துள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு லாக்கரில் ஒன்றின் உரிமையாளர் 5 சவரன் நகை மட்டுமே வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மற்றொரு லாக்கரின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால் அதில் என்னென்ன இருந்தது என்பத்கு குறித்த தகவல் இல்லை.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author