Published : 16 Mar 2018 08:13 AM
Last Updated : 16 Mar 2018 08:13 AM

அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் வழங்கல் திட்டத்துக்கு விரைவில் அனுமதி: நீர்வள ஆதாரத் துறைக்கு ரூ.5,127 கோடி ஒதுக்கீடு

அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் வழங்கல் மற்றும் நீர்பாசனத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்கவுள்ளது. மேலும், இத்திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிமராமத்து திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த, இந்த நிதி ஆண்டு பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்கீழ், இந்த நிதி ஆண்டில் மேலும் ரூ.250 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்படும். அரசு, நீர்வள நிலவளத் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகளை ரூ.3,008 கோடி திட்ட மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ், 29 மாவட்டங்களில், 66 உப வடிநிலப் பகுதிகளுடன் 4,778 குளங்களையும், 477 அணைக்கட்டுகளையும் மறுசீரமைப்பு செய்வதன் மூலம் 5.43 லட்சம் ஹெக்டேர் ஆயக்கட்டு நிலங்கள் பயனடையும். இந்த நிதி ஆண்டு பட்ஜெட்டில் ரூ.655.29 கோடி நீர்வள நிலவள 2-ம் கட்டத் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பருவநிலை மாற்றத் தழுவல் திட்டத்துக்கு ரூ.437.41 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.166.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

971 குளங்கள் நிரப்பப்படும்

அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் வழங்கல் மற்றும் நீர்பாசனத் திட்டத்தை, ரூ.1,789 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்க உள்ளது. இத்திட்டத்தின் மூலம் காளிங்கராயன் அணையின் கீழ்ப்புறத்திலிருந்து 1.5 டிஎம்சி அடி உபரி நீரினை நீரேற்றம் செய்து கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 32 பொதுப்பணித் துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளங்கள் நிரப்பப்படும்.

2018-19-ம் ஆண்டு பட்ஜெட்டில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வள ஆதாரத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.5,127.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x