Last Updated : 19 Mar, 2018 03:53 PM

 

Published : 19 Mar 2018 03:53 PM
Last Updated : 19 Mar 2018 03:53 PM

ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் காலமானார்; ஏங்கித் தவிக்கும் கோசாலை பசுக்கள்

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் இன்று (19.3.18) மதியம் காலமானார். உடல்நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஆண்டவன் சுவாமிகள் சிகிச்சை பலனின்றி பரமபதம் அடைந்தார் என்று ஆஸ்ரம நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் ஆஸ்ரமத்தின் முதல் பட்டம் திருக்குடந்தை தேசிகன் என்பவர். இப்போது பரமபதம் அடைந்த ஆண்டவன் சுவாமிகள், இந்த ஆஸ்ரமத்தின் 11வது பட்டமாவார்.

விருத்தாசலம் அருகில் உள்ள ஸ்ரீமுஷ்ணம்தான் இவரின் பூர்வீகம். இந்த ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில், தமிழாசிரியராகப் பணியாற்றிவந்த இவரின் பெயர் ரங்கராமானுஜ மகா தேசிகர். மனைவி, குழந்தைகள் என இருந்தாலும் ஆன்மிகத்திலும் பெருமாள் மீதும் கொண்ட தீவிர பக்தியால், துறவறம் பூண்டார். 28 வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் 11வது பட்டமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், ரங்கராமானுஜ மகா தேசிக சுவாமிகள், ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் சுவாமிகள் என்றெல்லாம் பக்தர்களால் அழைக்கப்பட்டார்.

தமிழின் மீது மாறாக் காதல் கொண்டிருந்தார் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள். அதேசமயம், சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

அன்பும் கருணையும் பிரதானம் என வாழ்ந்தவர் ஆண்டவன் சுவாமிகள். வித்தியாசமின்றி எல்லோரிடமும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவது இவரின் வழக்கம். ஏழைகளுக்காகவும் எல்லா தரப்பு மாணவர்களுக்காகவும் இவர் நடத்தி வரும் ஸ்ரீரங்கம் ஆண்டவர் கலை அறிவியல் கல்லூரியில், குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் கல்வி, தங்குமிடம், உணவு முதலானவை இலவசமாகவும் வழங்கப்படுகிறது. ‘இவங்களுக்குப் படிப்பு கிடைச்சுடுத்துன்னா, பின்னாடி நூறு பேருக்கு இவங்க படிக்கறதுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க’ என்று அடிக்கடி சொல்வார் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள்.

ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் ஆஸ்ரமத்துக்கு இந்தியா முழுவதும் கிளைகள் இருக்கின்றன. எல்லா ஊர்களிலும் தர்ம காரியங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், வேதபாட சாலைகளும் அமைக்கப்பட்டு, சிறுவர்களுக்கு வேதங்கள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. ‘அடுத்தடுத்த தலைமுறைக்கும் வேதங்களும் அதன் சாரங்களும் போய்ச் சேரணும். அப்படிப் போய்ச் சேர்ந்தாத்தான், இந்தியா வலுவான தேசமா, அன்பான தேசமா வளர்ந்து நிக்கும்’ என்று பாடசாலை ஆச்சார்யர்களுக்குச் சொல்லிவந்தார் சுவாமிகள்.

பல மொழிகளை அறிந்து வைத்திருப்பது போல், ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், ஜோதிடக் கலையை நன்கு அறிந்தவர். எதிரில் நிற்பவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரின் பிரச்சினைகள் என்ன, அவரின் தேவைகள் என்பதை பளிச்சென்று சொல்லிவிடுவார் சுவாமிகள். அதேபோல், ஆயுர்வேத வித்வானாகவும் திகழ்ந்தார் சுவாமிகள். தன் சிஷ்யர்கள், பக்தர்கள் எவர் வந்தாலும் அவர்கள் முக வாட்டத்தையும் பேச்சையும் கொண்டே, அவர்களுக்கு உடல்ரீதியாக என்ன பிரச்சினை என்பதைச் சொல்லி, அதற்கு உரிய மருந்தையும் சொல்லிவிடுவார். சுவாமிகள் சொன்ன மருந்தை உட்கொண்டு, உடனடி நிவாரணம் பெற்ற பக்தர்கள் ஏராளம் என்கின்றனர் ஆஸ்ரமத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல், வாஸ்து விஷயமும் சுவாமிகளுக்கு அத்துபடி என்கிறார்கள்.

பொய் சொன்னால் அறவே பிடிக்காது சுவாமிகளுக்கு. ‘தப்பு பண்ணிட்டியா. பரவாயில்ல. ஆனா உண்மை சொல்லு. தப்பை விட, பொய் சொல்றதுதான் மகாபாபம் என்பாராம் சுவாமிகள். அதேபோல், நற்காரியங்கள், தர்மச் செயல்கள் எவர் செய்தாலும் அவர்களை எல்லோர் முன்னிலையிலும் ஊக்கப்படுத்தி, பெருமைபடச் சொல்லி, கவுரப்படுத்துவார் சுவாமிகள்.

அன்புதான் பிரதானம். கருணையுடன் ஒருவரை அணுகுவதில்தான் வாழ்க்கையே அடங்கியிருக்கிறது. அன்பும் கருணையும் இருந்தால், வாழ்க்கையில் தோல்வியும் இல்லை. சிக்கலும் இல்லை என்பதை அடிக்கடி பக்தர்களுக்கு வலியுறுத்தி வந்த ஆண்டவன் சுவாமிகளுக்கு, பசுக்கள் மீது எப்போதுமே கொள்ளைப் பிரியம் உண்டு.

கோ பூஜை செய்யச் சொல்லியும் அதன் பலாபலன்களையும் அடிக்கடி எடுத்துரைப்பார் சுவாமிகள். மேலும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆஸ்ரமத்தில் 180க்கும் மேற்பட்ட பசுக்கள் கொண்ட கோசாலை இருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் இருக்கும் போது, அடிக்கடி கோ சாலைக்குச் சென்று பசுக்களுக்கு உணவு வழங்குவார். அதுமட்டுமா? பசுக்களுக்கு கண்ணா, கமலக்கண்ணா, லக்ஷ்மி என்றெல்லாம் பெயர் சூட்டியிருக்கிறார். அந்தப் பெயரைச் சொல்லி இவர் கூப்பிட்ட்டால், குழந்தையைப் போல் சுவாமிகளிடம் வந்து ஒட்டிக் கொண்டு நிற்குமாம் பசுக்கள்.

அன்பும் கருணையுமே பக்தி எனக் கொண்டு வாழ்ந்த ஆண்டவன் சுவாமிகள், இப்போது நம்மிடையே இல்லை. பரமபதம் அடைந்துவிட்டார்.

பாவம்... பக்தர்களும் அந்தப் பசுக்களும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x