Published : 15 Mar 2018 07:55 AM
Last Updated : 15 Mar 2018 07:55 AM

மருத்துவர் சிவக்குமாரிடம் 3 மணி நேரம் விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தில் 2-வது முறையாக ஆஜரானார்- முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வெங்கட்டரமணன் இன்று ஆஜராகிறார்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் நேற்று 2-வது முறையாக ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ், முன்னாள் டிஜிபி ராமானுஜம், டிஜிபி திரிபாதி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது சகோதரர் ஜெ.தீபக், மருத்துவர் பாலாஜி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறையில் உள்ள சசிகலாவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவரான சிவக்குமார், 2-வது முறையாக விசாரணை ஆணையத்தில் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து வெளியில் வந்த மருத்துவர் சிவக்குமார், அங்கிருந்த நிருபர்களிடம் கூறும்போது, ‘‘இரண்டாவது முறையாக என்னை விசாரணை ஆணையம் அழைத்திருந்தது. நீதிபதி கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளித்திருக்கிறேன். இன்னும் விசாரணை முடியவில்லை. இன்னொரு முறை சாட்சியம் அளிக்க வரவேண்டி இருக்கும் என்று நீதிபதி கூறியிருக்கிறார். தேதி எதுவும் குறிப்பிடவில்லை. இன்று ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை’’ என்றார்.

ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, நீங்கள் உடனிருந்ததாக ஓட்டுநர் ஐயப்பன் தெரிவித்திருந்தாரே என நிருபர்கள் கேட்டபோது, ‘‘எல்லோரும் அளித்த சாட்சியத்தை வைத்து, நீதிபதி முடிவெடுப்பார்’’ என்று சிவக்குமார் பதில் அளித்தார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வெங்கட்டரமணன், விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளார். இவர், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, முதல்வரின் தனிச் செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x