

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட முகமூடி கும்பலைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை போலீஸ்காரரை காளையார்கோவில் காவல் துறையினர் திங்கட்கிழமை இரவு கைது செய்தனர்.
காளையார்கோவில் பகுதியில், கடந்த மே 23-ம் தேதி சிலுக்கபட்டி அருள்முத்து என்பவரின் வீட்டுக் குள் புகுந்த முகமூடிக் கும்பல், நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றது. அடுத்த நாள் மோட்டார் சைக் கிளில் சென்ற ஆசிரியை கரோலின் மேரியிடம், 7 பவுன் நகையை பறித்தது. இதேபோன்று, பல வழிப்பறிச் சம்பவங்களில் அக்கும்பல் ஈடுபட்டது.
இதையடுத்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் குண்டாக்குடையைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் தலைமையி லான கும்பல் இந்த வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதில் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்தவரும், மதுரை பட்டாலியன் போலீஸ்காரருமான பாண்டித்துரை, அவரது நண்பர் மதுரையைச் சேர்ந்த எஸ்எஸ்ஐ மகன் அசோக், தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவர் லூயிஸ் மார்ஷல், காளையார்கோவிலைச் சேர்ந்த கொத்தனார் மோகனசுந்தரம் ஆகியோரை ஏற்கெனவே போலீஸார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த கல்யாணசுந்தரத்தின் உறவினரும், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்காரருமான கார்த்திக்குமார்(25) என்பவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை வாகனச் சோதனையின் போது கார்த்திக்குமார் போலீஸில் சிக்கினார். விசாரித்ததில், கடந்த ஆண்டு விடுமுறையில் வந்த கார்த்திக்குமார் திரும்பவும் பணிக்குச் செல்லாமல் முகமூடிக் கும்பலோடு சேர்ந்து பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
காளையார்கோவில் போலீ ஸார் கார்த்திக்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்து 8 பவுன் நகைகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.