

பேசின்பிரிட்ஜ் - சென்னை சென்ட்ரல் இடையே தினமும் புறநகர் மின்சார ரயில்கள் மிகவும் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால், அலுவலகத்துக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி, வேலூர், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை ஆகிய ஊர்களுக்கு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 175க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
தினந்தோறும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, திருத்தணி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு பேருந்து பயணத்தைவிட ரயில் பயணம் மிகவும் சௌகரியமாக உள்ளது. அத்துடன் ரயில் கட்டணமும் குறைவாக உள்ளது.
அண்மைக் காலமாக ரயிலில் வருபவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பேசின்பிரிட்ஜ்-சென்ட்ரல் இடையே ரயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்படுவதே இதற்குக் காரணம். அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து வரும் ரயில்கள் பேசின்பிரிட்ஜ் வரை சரியான நேரத்துக்குள் வந்து சேர்ந்து விடுகின்றன.
அதன்பிறகு பேசின்பிரிட்ஜ்-சென்ட்ரல் இடையே உள்ள மூன்று கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் ஆகின்றன.
இதனால், காலையில் வேலைக்குச் செல்பவர்கள் தினமும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, பயணி ஒருவர் கூறுகையில், ‘‘நான் எழும்பூரில் வேலை செய்கிறேன். தினமும் ஆவடியில் இருந்து ரயில் மூலம் சென்ட்ரல் வந்து பின்னர் பேருந்தில் அலுவலகத்துக்கு செல்வேன்.
ஆவடியில் இருந்து பேசின்பிரிட்ஜ் ரயில் நிலைய தூரம் 20 கி.மீ. இத்தூரத்தை 35 நிமிடங்களில் ரயில் கடந்து விடுகிறது. ஆனால் பேசின்பிரிட்ஜ், சென்ட்ரல் இடையே உள்ள 3 கி.மீ. தூரத்தைக் கடக்க 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது.
தினமும் இதேபோல் காலை நேரத்தில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்” என்றார்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் (பிளாட்பாரம்) மட்டுமே உள்ளதால், ரயில்களை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, ரயில்கள் ரயில் நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்படுகின்றன. மேலும், கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இருந்து பிரிந்து செல்கின்றன.
அத்துடன், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சில நேரங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் வழித்தடத்தில் இயக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அத்தகைய சமயங்களில் பேசின்பிரிட்ஜ்- சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு இடையே கிராசிங்குகள் உள்ளதால் ரயில்களை இயக்க முடியாமல் இடையில் நிறுத்தப்படுகிறது.
முடிந்த அளவுக்கு ரயில்களை சரியான நேரத்துக்குள் இயக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் மேற்கண்ட காரணங்களால் ரயில்களை குறித்த நேரத்தில் இயக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது’’ என்றார்.