

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் உயிரிழந்த விவசாயி சடலத்துடன் கிராம மக்கள் நள்ளிரவு வரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். யானைகளின் தொடர் தாக்குதலால் மக்கள் பீதியில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந் தன. பின்னர் இந்த யானைகள் கூட்டம், கூட்டமாகப் பிரிந்து மீண்டும் கர்நாடகாவுக்குச் சென்றன. இதில் 38 யானைகள் தமிழக - ஆந்திர எல்லையில் முகாமிட்டு விவசாயிகளை தாக்கியும், பயிர்களை சேதப்படுத் தியும் வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் மகாராஜகடை வனப்பகுதியில் நுழைந்த யானைகள் அங்கிருந்த விவசாயி சின்னப்பையன்(65) மற்றும் முனிவேலன்(35) ஆகி யோரை சுற்றி வளைத்துத் தாக்கின. இதில் சின்னப்பையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். படுகாயம் அடைந்த முனி வேலன் கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சாலை மறியல்
யானைகளின் தொடர் அட்டகாசத்தால் ஆத்திரம் அடைந்த மக்கள் சின்னப்பையனின் சடலத்துடன் கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வனக்காப்பாளர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை சூறை யாடினர். தகவலறிந்த வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, டிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்தது.
யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும், உரிய இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கடந்த 11-ம் தேதி குருபரப் பள்ளி பகுதியில் காட்டுயானை தாக்கிய தில் சரஸ்வதி என்பவர் உயிரிழந் தார். தொடரும் உயிரிழப்புகளை தடுக்க இப்பகுதியில் உள்ள இளைஞர்களைக் கொண்டு ஃபிரண்ட்ஸ் ஆஃப் பாரஸ்ட் என்ற அமைப்பை உருவாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.