மதுரையில் கந்துவட்டி கும்பல் வீடு புகுந்து மிரட்டல்: தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி

மதுரையில் கந்துவட்டி கும்பல் வீடு புகுந்து மிரட்டல்: தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி
Updated on
1 min read

கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு பயந்து கல்லூரி மாணவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகேயுள்ள குராயூரைச் சேர்ந்த பழ வியாபாரி பாண்டி. இவரது மனைவி காவேரி. கூலி வேலை பார்க்கிறார். கடந்த 2010-ல் அரசு நிதி உதவியுடன் கான்கிரீட் வீடு கட்டுவதற்காக, மதுரை மருதுபாண்டியர் நகரிலுள்ள கந்து வட்டிக்காரரும், தனது உறவினருமான மாரியப்பன் என்பவரிடம் 5 வட்டிக்கு ரூ. 1 லட்சம் பாண்டி கடன் வாங்கியுள்ளார்.

பின்னர், மூத்த மகள் முருகேஸ்வரி திருமணத்துக்காக, 2012-ல் 10 வட்டிக்கு மாரியப்பனிடம் மீண்டும் ரூ. 1 லட்சம் வாங்கியுள்ளார். அதற்காக வட்டிப் பணம் ரூ. 15 ஆயிரத்தை மாதாமாதம் பாண்டி கொடுத்து வந்தார்.

பாண்டியின் மகன் பாலமுருகன், சென்னையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன் ரூ. 1.80 லட்சம் வங்கிக் கடன் பெற்று பாண்டியிடம் கொடுத்து, கடனை அடைக்குமாறு கூறினாராம்.

அதன்படியே, பாண்டி ரூ.1.80 லட்சத்தை மாரியப்பனிடம் கொடுத்துள்ளார். மீதி தொகை ரூ. 20 ஆயிரத்துக்கு வட்டியாக மாதம் ரூ. 2 ஆயிரம் கொடுத்து வந்துள்ளார். கடந்த மாதம் வட்டிப் பணம் ரூ.2 ஆயிரம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த மாரியப்பனும், அவரது ஆட்களும் பாண்டியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும், அவர் கொடுத்த ரூ. 1.80 லட்சத்தையும் வாங்கவில்லை என மறுத்ததாகவும், கடன் வாங்கியபோது பாண்டி எழுதிக் கொடுத்த புரோ நோட்டையும் அவர்கள் கொடுக்க மறுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாரியப்பனின் ஆட்கள் வீடு புகுந்து பாண்டியை கடந்த 2 நாள்களுக்கு முன் மிரட்டியுள்ளனர். அதனால், உயிருக்கு பயந்து பாண்டியும் அவரது மனைவியும் தலை மறைவாயினர். வீட்டில், அவர்களது 2-வது மகள் பழனிச்செல்வி (20) மட்டும் இருந்துள்ளார். இவர், விருதுநகரிலுள்ள கல்லூரியில் பி.ஏ 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த பழனிச்செல்வியை கந்துவட்டி கும்பல் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, கள்ளிக்குடி காவல் நிலையத்தில் பழனிச்செல்வி புகார் கொடுக்கச் சென்றபோது, போலீஸார் புகாரை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

போலீஸும் சேர்ந்து மிரட்டியதாகப் புகார்

அதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கந்துவட்டி கும்பலும், கள்ளிக்குடி காவல் உதவி ஆய்வாளர் குருசாமி என்பவரும் சேர்ந்து வந்து வீட்டில் தனியாக இருந்த பழனிச்செல்வியை மிரட்டினராம். அதில் சிலர், கல்லூரி செல்லும்போது முகத்தில் ஆசிட் வீசுவோம் என்று கூறினராம்.

இதனால் அச்சமடைந்த மாணவி பழனிச்செல்வி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் உள்ளவர்கள் பார்த்து, பழனிச் செல்வியை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக பாண்டியும், அவரது மனைவி காவேரியும் மதுரை எஸ்.பி.யை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in