

நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா - சினிமா படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்சய் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார், பின்னர் திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். இயக்குநர் மணிரத்னம் மற்றும் தந்தையிடம் பயிற்சி பெற்ற அவர், தற்போது பார்த்திபன் இயக்கிவரும் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில், ‘பீட்சா’ தமிழ் படத்தின் இந்தி ரீமேக் படத்தை இயக்கிய அக்சய்யுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இவர் திரைப்பட எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் ஆவார். இந்நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் அக்சய் - கீர்த்தனா திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், ஷங்கர், இளையராஜா, வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சிவகுமார், சரத்குமார், விஷால், சூர்யா, விஜய் சேதுபதி, ஸ்ரீப்ரியா, குஷ்பு உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.