Published : 10 Mar 2018 10:23 AM
Last Updated : 10 Mar 2018 10:23 AM

அடுத்த ஆண்டு முதல் சிறந்த 3 ஆவணப் படங்களுக்கு மாணிக் சர்க்கார் பெயரில் விருது: புதுச்சேரி சர்வதேச ஆவணப்பட விழாவில் எடிட்டர் லெனின் தகவல்

அடுத்த ஆண்டு முதல் சிறந்த 3 குறும்படம், ஆவணப் படங்களுக்கு திரிபுரா முன்னாள் முதல் வர் மாணிக் சர்க்கார் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று புதுச்சேரி சர்வதேச ஆவணப்பட, குறும்பட விழாவில் திரைப்பட எடிட்டர் லெனின் கூறினார்.

புதுச்சேரியில் 7-வது ஆண் டாக சர்வதேச ஆவணப்படம், குறும்பட திருவிழா புதுச்சேரி பல்கலைக்கழக ஜவஹர்லால் நேரு கலையரங்கில் நேற்று தொடங்கியது. மும்பை மத்திய திரைப்படப் பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த இந்நிகழ்வை திரைப்பட இயக்குநர் கோபி நயினார் மேளம் கொட்டி தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது, ‘‘திரையரங்கில் திரையிடப்படும் திரைப்படங்கள் சமூக வாழ்க்கைக்கு எதிரான கட்டமைப்பாகவே உள்ளன. அதற்கு எதிர் இயக்கமே குறும்படங்கள். ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை கலை வடிவில் கவனிக்கும் பார்வையைத் தரும் பணியை இந்தப் படைப்பாளிகள் செய்கிறார்கள். ஆனால், பெரும் சமூக பார்வையை வணிகமாக்குகின்றன திரைப்படங்கள். குறிப்பாக அரசுக்கு ஆதரவாகவே திரைப்படங்கள் உருவாகிறது. அப்படி செய்ய இயலுமா என்று கேள்வி எழுந்தாலும் அப்படித்தான் நடக்கிறது’’ என்றார்.

திரைப்பட எடிட்டர் லெனின் கூறும்போது, “சென்னை பல்கலைக்கழகத்தில் ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிட இடம் கேட்டும் இதுவரை தரவில்லை. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 7-வது ஆண்டாக அனுமதி தருகிறார்கள். கலை விஷயத்தில் புதுச்சேரியும், திருவண்ணாமலையும் முன்னோடியாக உள்ளன. அடுத்த ஆண்டு முதல் குறும்படம், ஆவணப்படங்களுக்கு திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் பெயரில் விருதுகள் தரப்படும். முதல் 3 இடங்களுக்கான விருதுகளும் அவர் பெயரிலேயே தர விருப்பம். மாணிக் சர்க்கார் போன்ற எளிமையான முதல்வர்களை மக்கள் தோற்கடிக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் பெயரில் ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை தர முடிவு எடுத்துள்ளேன்” என்றார்.

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசும்போது, “கருத்து சுதந்திரம், படைப்பு சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் நிகழும் சூழல் உள்ள காலம் இது. குறும்படங்கள், ஆவணப்படங்கள் உண்மையின் பக்கம் நிற்கின்றன. உண்மையைப் பேசும் கலைஞர்களும், எழுத்தாளர்களும் சமூகத்தின் மனசாட்சி. அவர்கள் பேசாப் பொருளையும் பேசுபவர்கள்” என்று குறிப்பிட்டார்.

24 படங்கள் திரையிடல்

மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, விருதுகள் பெற்ற 12 படங்களும், தமிழகத்தைச் சேர்ந்த இளம் இயக்குநர்களின் 12 குறும்படங்களும் திரையிடப்படுகின்றன. இவற்றில் 16 தமிழ் திரைப்படங்களும், பிற இந்திய மொழிப் படங்களும் இடம்பெறுகின்றன.

அமெரிக்கா, பின்லாந்து, ஆஸ்திரியா, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.

விழாவில் முதல் படமாக சிரியா பற்றிய ‘சிட்டி ஆப் ஹோஸ்ட்’ ஆவணப்படம் திரை யிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x