

புதிய தலைமைச் செயலகக் கட்டிட விவகாரம் தொடர்பாக நீதிபதி ரெகுபதி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு திமுக தலைவர் கருணாநிதி நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் தோட்டத் தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரெகுபதி தலைமை யில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. கட்டிடம் கட்டப்பட்டபோது முதல்வராக இருந்த திமுக தலைவர் கரு ணாநிதி, செப்டம்பர் 18-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சம்மன் அனுப்பி யிருந்தது.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தற்போது தலைமைச் செயலகம் செயல்படும் புனித ஜார்ஜ் கோட்டை 17-ம் நூற்றாண்டில் கட்டப் பட்டது. அந்த இடத்தில் தலைமைச் செயலகம் செயல்பட போதிய வசதிகள் இல்லாததால் வேறு இடத்துக்கு மாற்றுவது பற்றி நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் இதற்கான முயற்சிகள் நடந்தன. அதேபோல் ஜெயலலிதா ஏற்கெனவே முதல்வராக இருந்த போது ராணி மேரிக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் தலைமைச் செய லகத்தை அமைப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டார். எனினும் அந்த முயற்சிகள் நிறைவேற வில்லை.
இந்நிலையில் 2006-ம் ஆண்டு எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகக் கட்டிடம் கட்டுவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன. வேறு எந்த மாநிலத் திலும் இல்லாத வகையில் உலகத் தரத்திலான புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் கட்டப்பட்டது. 2010-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார். 4 சட்டப்பேரவை கூட்டத் தொடர்கள் அந்தக் கட்டிடத்தில் நடந்துள்ளன.
2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்னர், மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே தலை மைச் செயலகத்தை முதல்வர் ஜெய லலிதா மாற்றினார். மேலும், புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றப் படும் எனவும் அறிவித்தார்.
இதுதவிர புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் கட்டுவதில் நடந்த முறைகேடுகள் பற்றி விசா ரணை எனக் கூறி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சொந்த காரணங்களுக்காக நீதிபதி தங்கராஜ் ராஜினாமா செய்து விட்டதால், உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசாரணை ஆணை யம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் 18-ம் தேதி (இன்று) விசாரணைக்காக ஆஜ ராக வேண்டும் என்று எனக்கு விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான எவ்வித ஆவணங்களும் எனக்கு தரப்படாத நிலையில் என்னை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது சரியல்ல. எனவே, அந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி வி.ராம சுப்ரமணியன் முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “விசாரணை ஆணையம் முன்பு கருணாநிதி ஆஜராக வேண்டும் என்ற சம்மனை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.முத்துக் குமாரசாமி, “மனுதாரர் கருணாநிதி நேரில் ஆஜராகத் தேவையில்லை. அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி னால் போதுமானது” என்றார்.
இதையடுத்து விசாரணை ஆணையம் முன்பு நேரில் ஆஜ ராக கருணாநிதிக்கு விலக்கு அளிப்பதாக உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.