Published : 15 Mar 2018 04:30 PM
Last Updated : 15 Mar 2018 04:30 PM

எங்கள் பதவியில் குரூப்-1 அதிகாரிகள் நியமனமா?- ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு

ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற அதிகாரிகளுக்கு அவர்களுக்கு உரிய பதவிக்கான இடத்தில் குரூப் ஒன் அதிகாரிகளை நியமிக்கக் கூடாது என்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவரும், தீயணைப்புத்துறை டிஜிபியுமான கே.பி.மகேந்திரன் ஐபிஎஸ் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதம்:

“ஐபிஎஸ் தேர்வாகி வரும் இளம் அதிகாரிகளுக்கு உரிய பதவியில் அவர்களை நியமிப்பதற்கு பதிலாக தமிழக அரசு தேர்வாணையத்தின் மூலம் குரூப் ஒன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வரும் போலீஸ் அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவியில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள் என்று எங்களின் சங்கத்தின் உறுப்பினர்கள் ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர்.

இவ்வாறு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவியில் குரூப் ஒன் அதிகாரிகளை நியமிப்பது நாடாளுமன்றம் வகுத்துள்ள விதிகளை அவமதிப்பதாகும். இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும்.

 

 

‘இந்திய போலீஸ் சர்வீஸ் 1954 விதிகளின்படி, கேடர் ஆபிஸர் என்ற பதவியில் ஐபிஎஸ் தேர்வாகி வரும் அதிகாரிகளை மட்டும் நியமிக்க முடியும். இதில் வேறு யாரையும் நியமிக்க முடியாது என்று விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு கேடர் ஆபிஸர் பதவியிலும் ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.

ஒருவேளை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே அதாவது பிரிவு 9-ன் கீழ் மட்டுமே கேடர் ஆபிஸர் இல்லாத நிலையில், மாநில தேர்வாணையத்தில் குரூப்ஒன் அதிகாரிகளை நியமித்துக்கொள்ளலாம்.

அப்படியே நியமிக்கப்பட்டாலும், அந்தப் பதவியில் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் நீடிக்கக் கூடாது. அவ்வாறு நீடிக்க வேண்டுமானால், மத்திய அரசிடம் மாநில அரசு முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும்.’

தமிழகத்தில் 143 கேடர் ஆபிஸர் பதவிக்கான இடம் இருக்கிறது. மாவட்ட எஸ்பி. காவல் துணை ஆணையர் (டிசி) பதவிக்காக 76 கேடர் ஆபிஸர் பதவிகள் உள்ளன. இதில் 76 பதவிகளில் 41 பதவிகளில் கேடர் ஆபிஸர் இல்லாத குரூப் ஒன் மூலம் தேர்வான அதிகாரிகளே நிரப்பப்பட்டுள்ளனர்.

கடந்த 1962-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி, கேடர் ஆபிஸர் பதவியில் தகுதியான அதிகாரிகள் இருக்கின்ற சூழலில், அவர்களை நியமிக்காமல், கேடர் ஆபிஸர் அல்லாத குரூப்-1 அதிகாரிகளை நியமிக்க முடியாது. மேலும், கேடர் ஆபிஸர் பதவிக்கான சரியான அதிகாரிகள் இருக்கின்றார்களா அல்லது இல்லையா என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

இது தொடர்பாக கடந்த 1993-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசுக்கும், சயீத் காலித் ரிஸ்வி என்பவருக்கும் இடையிலான வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டுகிறோம். அந்தத் தீர்ப்பில் கேடர் ஆபிஸர் நியமிக்க வேண்டிய இடத்தில் வேறு அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை நியமிக்க முடியாது. ஐபிஎஸ் விதிகள் 1954-ன் படி எந்த விதமான விதிமுறைகள் கூறப்பட்டுள்ளதோ அதன்படிதான் செயல்பட முடியும்.

கேடர் ஆபிஸர் பதவிக்கு கேடர் ஆபிஸர் இல்லாத அதிகாரிகள் நியமிக்க முடியாது அதிலும் தவிர்க்க முடியாத சூழலில் 3 மாதங்களும், மத்திய அரசிடம் முன் அனுமதி பெற்று மாநில அரசுகள் 6 மாதங்கள் வரை நியமித்துக்கொள்ளலாம்.

கேடர் ஆபிஸருக்கான பதவியில் கேடர் ஆபிஸர் தகுதியில் வராத அதிகாரிகளை நியமிப்பது சட்ட விரோதமானது. ஆதலால், உடனடியாக கேடர் ஆபிஸர் பதவிக்கான இடத்தில் இருக்கும் கேடர் ஆபிஸர் அல்லாத அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேடர் ஆபிஸர் பதவியில் ஐபிஎஸ் முடித்து வரும் அதிகாரிகளை நியமித்தால் மட்டுமே அவர்கள் முழுமையாக கற்றுக்கொள்ள வாய்ப்புகள் அளிக்க முடியும். ஐஏஎஸ் கேடரஸ் மேலாண்மை போல் ஐபிஎஸ் கிடையாது.

கேடர் ஆபிஸர் பதவியில் கேடர் ஆபிஸர் தகுதி இல்லாத அதிகாரிகளை நியமிக்கும் போது, ஒரு குழப்பமான நிலை உருவாகும், உண்மையிலேயே ஐபிஎஸ் படித்து, பயிற்சி முடித்து வரும் இளம் அதிகாரிகளின் மனநிலையை பாதித்து, வளர்ச்சிக்கும், வாழ்க்கை திட்டமிடலையும் குலைத்துவிடும். இன்றைய இளம் அதிகாரிகள்தான் நாளைய தலைவர்கள் என்பது தான் கேடர் மேலாண்மையின் கொள்கையாகும்.

கேடர் ஆபிஸர் விதிமுறைகளை நீண்டகாலமாக மீறி பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இது தமிழக காவல்துறைக்கு ஆரோக்கியமானதல்ல. ஆதலால், கேடர் ஆபிஸர் விதிமுறைகளுக்கு ஏற்றார்போல் அந்தந்த பதவியில் ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்க வேண்டும். இளம் ஐபிஎஸ் அதிகாரிகளின் வளர்ச்சியை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.”

இவ்வாறு கே.பி.மகேந்திரன் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x