Published : 01 Mar 2018 07:52 AM
Last Updated : 01 Mar 2018 07:52 AM

காஞ்சிபுரம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறைவு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் மரணம் அடைந்ததை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரது காலத்தில் பல்வேறு பள்ளிகள், கண் மருத்துவமனை, குழந்தை அறக்கட்டளை மருத்துவனை, இந்து மிஷன் மருத்துவமனை உட்பட பல்வேறு பொதுநல நிறுவனங்களை சமுதாய நலப்பணிக்காகத் தொடங்கினார். அவரது மறைவு சமுதாயத்துக்கும் மற்றும் அவரது பக்தர்களுக்கும் பெரிய இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

தமிழக முதல்வர் கே.பழனிசாமி: காஞ்சி மடத்தின் 69-வது மடாதிபதியான காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். 1994-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் 69-வது மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டு, காஞ்சி பெரியவருக்குப் பிறகு மடத்தினை அவர் சிறப்பாக வழி நடத்தினார்.

ஆன்மிகப் பணிகளோடு, சமூக முன்னேற்றப் பணிகளிலும் அவர் அக்கறை காட்டியவர். அவரை இழந்து வாடும் அவரது ஆன்மிக பக்தர்களுக்கும், காஞ்சி சங்கர மடத்தின் நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்: காஞ்சிமடத்தின் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக் குறைவால் திடீரென்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுவை முதல்வர் நாராயணசாமி: புதுவை அரசு காரைக்காலில் புஷ்கரணி விழாவினை நடத்தியபோது அதில் அவர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தது என்றும் மனதில் நீங்காத ஒன்றாகும். அவரது மறைவால் துயரில் உள்ள அனைவருக்கும் என் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சு.திருநாவுக்கரசர் (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி): இந்து மதத்தின் வளர்ச்சிக்காகவும், இந்து மதத்தின் கொள்கை கோட்பாடுகளைக் காக்கவும், பரப்பவும் தொடர்ந்து தொய்வின்றி பாடுபட்டு வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவரது மறைவு ஆன்மிக உலகுக்கு பேரிழப்பாகும்.

ராமகோபாலன் (நிறுவன அமைப்பாளர், இந்து முன்னணி, தமிழ்நாடு): காஞ்சி காமகோடி மடத்தின் 69-வது பீடாதிபதி ஜெயேந்திர சுவாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார். தமிழகத்தில் நாத்திகம், மதமாற்றம் போன்ற காரிருளை அகற்றிட இந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து ஆன்மிக வழியில் செல்ல பெரும்பங்காற்றியவர் அவர். அவரது இழப்பு ஆன்மிக உலகிலும், பாரத தேசத்துக்கும் பேரிழப்பாகும்.

டாக்டர் ராமதாஸ் (நிறுவனர், பாமக): காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி, மடாதிபதி என்பதைக் கடந்து கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளைத் தொடங்கி சேவை நோக்கத்துடன் நடத்தி வந்தார். அவரது மறைவு அவரைச் சார்ந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

விஜயகாந்த் (நிறுவனத் தலைவர், தேமுதிக): காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தனது 83 வயதில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மனவருத்தம் அடைந்தேன். அவரை பிரிந்துவாடும் காஞ்சி மடத்தின் நிர்வாகிகளுக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்): காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

அவருடனும், அவரது மடத்துடனும் திராவிடர் கழகத்துக்கு எவ்வளவு மலையளவு கருத்து கொள்கை வேறுபாடுகள் இருப்பினும் திராவிடர் கழகம் அவரது மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஜி.கே.வாசன் (தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்): ஆன்மிகப் பணிகள், கல்விப் பணிகள், சமூக சேவைப் பணிகள் போன்றவற்றில் தனது பணியை சிறப்பாக சங்கர மடத்தின் மூலம் செய்து வந்தவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி. அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எம்.காதர் மொகிதீன் (தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்):

காஞ்சி சங்கர மடத்தின் தலைவர், ஜெயேந்திரர் மரணமுற்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், துக்கத்தையும் அளிக்கிறது. ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ எனும் தத்துவ நெறியில் ஆன்மிக வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்துள்ள சங்கராச்சாரியார் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

தமிழிசை சவுந்தரராஜன் (மாநில தலைவர், தமிழக பாஜக): ஒரு தேசிய அக்கறை உடைய ஆன்மிகவாதியை இழந்திருக்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான மோதல்களும், கட்டாய மத மாற்றங்களும் ஏற்பட்டபோது தானே களத்துக்குச் சென்று இந்து மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை அவர்களோடு இணக்கமாகவும், இதமாகவும் இருந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.

திருமாவளவன் (தலைவர் விசிக): காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் திடீரென காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

டாக்டர் அன்புமணி (இளைஞரணித் தலைவர், பாமக): மடாதிபதியாக இருந்தாலும் மக்களுடன் நன்கு பழகியவர். அவரது மறைவு அவரைச் சார்ந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா மதங்களையும் சமமாக மதித்தவர். மேலும், பல்வேறு மதங்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர். ஆன்மிக துறையில் அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது.

கமல்ஹாசன் (தலைவர், மக்கள் நீதி மய்யம்): காஞ்சிபுரம் சங்கரமடத்தின் பீடாதிபதியான சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி காலமாகி விட்டார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சரத்குமார் (நிறுவனத் தலைவர், சமத்துவ மக்கள் கட்சி): காஞ்சி மகா பெரியவரின் மறைவுக்குப் பிறகு சங்கர மடத்தை திறம்பட நிர்வகித்து வந்தவர் ஜெயேந்திரர். ஆன்மிகம் மட்டுமல்லாமல், சமூக பணிகளும் மேற்கொண்டு வந்தார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது.

பாரிவேந்தர் (நிறுவனத் தலைவர், இந்திய ஜனநாயகக் கட்சி): ஆன்மிகப் பணியுடன், சமூகப் பணியினையும் ஒருங்கிணைத்து சாதாரண - சாமானிய மக்களிடமும் தனது உபதேசங்களின் மூலமும், செயல்பாடுகளின் மூலமும் பெரும் தொண்டாற்றியவர் ஸ்ரீ ஜெயேந்திரர். அவரின் மறைவால் வருத்தமுற்றிருக்கும் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் தலைவர் ந.சேதுராமன், சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் எம்எல்ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x