Published : 01 Mar 2018 10:00 AM
Last Updated : 01 Mar 2018 10:00 AM

தலித் சிறுவனை கொன்று தாய் - மகள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்: 34 பேரிடம் போலீஸார் விசாரணை- குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருக்கோவிலூரில் சாலை மறியல்

திருக்கோயிலூர் தலித் சிறுவன் கொல்லப்பட்டு, தாய், மகள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. இதுவரையில் ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் உட்பட 34 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் 4 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார். இவரது மனைவி, 8-ம் வகுப்பு பயிலும் தனது மகள், 4-ம் வகுப்பு படித்து வந்த தனது மகனுடன் வசித்து வந்தார். கடந்த 22-ம் தேதி இரவு அவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், மூவரையும் தாக்கியுள்ளனர். இதில், சமயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தாயும், மகளும் சுய நினைவு திரும்பாத நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இருவரும் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து, பல்வேறு தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டு வந்த நிலையில்,காவல் துறையினர், இதுவரையில் 34 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் ஆந்திராவைச் சேர்ந்த 4 பேரும் அடக்கம்.

யார் அந்த மர்மக்கும்பல்?

இதுதொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் விசாரித்தபோது, ‘கணவனை இழந்த அப்பெண், யாரிடமும் அதிகமாக பேசமாட்டார். அவருக்கு இப்படி சூழல் ஏற்பட்டிருப்பது கிராமத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களில், இதேபோன்று 2 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சிலர் வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி அவற்றை வெளியில் சொல்ல முன்வரவில்லை. நிறைய மொழி தெரியாதவர்கள் எங்கள் கிராமத்துக்கு வியாபாரத்துக்காக வந்து செல்கின்றனர். அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது’ என்றனர்.

விரைவில் பிடிபடுவர்

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ‘5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. அனைத்து வழிகளிலும், அனைத்து மட்டத்திலும் விசாரணையை மேற்கொண்டுள்ளோம். வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 34 பேரிடம் விசாரணை நடத்தியிருக்கிறோம். அந்தக் கிராமத்தில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளியை கைது செய்வோம்’ என்றார்.

சாலை மறியல்

இதனிடையே இச்சம்பவத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் அனைத்துக் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியல் குறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் சார் ஆட்சியர் சாருஸ்ரீ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைத்திட, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் பார்வையிட்டார்

ஜிப்மரில் சிகிச்சை பெறும் தாய், மகள் இருவரும் சுயநினைவற்ற நிலையில் உள்ளனர்.

ஜிப்மருக்கு நேற்று வந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், இருவருக்கும் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அமைச்சருடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன்,வையாபுரி மணிகண்டன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘அந்தப் பெண் அரை மயக்க நிலையில் உள்ளார். அவரது மகளின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. குற்றவாளிகளை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x