

பக்ரைன் நாட்டில் தவிக்கும் கணவரை மீட்டு தரக் கோரி, அவரது மனைவி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் மனு அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்துக்கு உட்பட்ட போடிப்பட்டியைச் சேர்ந்தவர் பி.சத்தியநாராயணன்(30). முதுகலை கணினி அறிவியல் பட்டதாரியான இவருக்கு, 3 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பக்ரைன் நாட்டிலுள்ள `டீரீம் மேக்கர்ஸ் கம்ப்யூட்டர்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் 2010-ம் ஆண்டு வேலை கிடைத்தது. இவருடைய மனைவி எஸ்.அம்பிகாவதி (30) மற்றும் மகன்கள் கார்த்திக்(10), தர்ஷன்(5) ஆகியோர் போடிப் பட்டியில் வசிக்கின்றனர்.
இதுதொடர்பாக அம்பிகாவதி கூறியதாவது:
“ கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன், கணவருடைய மூன்று ஆண்டு கால ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. இதை யடுத்து, நாடு திரும்புவதற்காக வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், அந்த நிறுவனம் அதை ஏற்காமல் கடந்த பிப்ரவரி மாதம் வரை பணிபுரியும்படி கேட்டுள்ளனர். அதை ஏற்று மேலும் மூன்று மாதங்கள் பணி புரிந்திருக்கிறார்.
இந்நிலையில், அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றை தர மறுத்து, தங்கள் நிறுவனத்திலேயே தொடர்ந்து பணிபுரிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர். வேலை செய்த காலத்துக்கான ஊதியத்தையும் வழங்காமல் உள்ளனர். இது தொடர்பாக, பக்ரைன் நாட்டிலுள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், நிலுவை ஊதியம் மற்றும் பாஸ்போர்ட், விசாவை திரும்ப வழங்கி, அவரது நாட்டுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென தீர்ப்பு கூறியுள்ளது.
இந்நிலையில், கணவரின் பாஸ்போர்ட், விசா காணாமல் போய்விட்டதாகவும், நிறுவனத்தைவிட்டு அவர் தப்பி ஓடிவிட்டதாகவும் உள்ளூர் காவல் நிலையத்தில், தனியார் நிறுவனத்தினர் பொய் புகார் அளித்துள்ளனர். இதனால், அந்நாட்டு காவல்துறை, கணவரை கைது செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திலும் கணவர் புகார் அளித்துள்ளார்.
இக்கட்டான நிலையில், நண்பர்கள் உதவியுடன் அங்கு வசிக்கும் கணவரை மீட்டுத் தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.