

‘‘அக்காவின் உடல் அதிர்ந்து நடுங்கியது. அவரது பற்கள் இறுகின. அக்கா ஏதோ சொல்ல முயற்சித்தார், அக்கா.. அக்கா என்று கதறினேன்’’ என ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள் குறித்து சசிகலா கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது. அதில் சசிகலா தரப்பில் வாக்குமூலம் 55 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு விவரங்களை அவர் கூறியிருந்தார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றது, அவரை அங்கு சந்தித்தவர்கள் யார் என்ற விவரங்களை விரிவாக கூறியிருந்தார். அதுபோலவே 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் மாலை ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அப்போது நடந்த விவரங்களையும் சசிகால பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
"2016 டிசம்பர் 4-ம் தேதியன்று மாலை 4.20 மணியளவில் படுக்கையில் சாய்வாக படுத்தபடியே, ‘டிவி’யில் ஜெய் வீர ஹனுமான் தொடரை அக்கா பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கண்ணாடி அணிந்து இருந்தார். அவர் கேட்டுக்கொண்டபடி, தாதி ஒருவர், காப்பியும் பன்னையும் கொண்டு வந்தார். அப்போது, நிகழ்ச்சி முடிந்தது விடவே, ரிமோட் மூலம் டிவியை அவர் அணைத்தார்.
காப்பியும், பன்னும் கொண்டு வந்த ட்ராலியை தனது படுக்கைக்கு அருகே கொண்டு வருமாறு கூறினார். அப்போது அந்த அறையில் என்னுடன் ஒரு பெண் மருத்துவரும் ஒரு செவிலியரும் இருந்தனர். மருத்துவர் ரமேஷ் வெங்கடராமன் வெளியே இருந்தார்.
திடீரென்று அக்காவின் உடல் அதிர்ந்து நடுங்கியது. அவரது நாக்கு வெளியே ஒருபுறமாக தள்ளியது. அவரது பற்கள் இறுகின. அக்கா ஏதோ சொல்ல முயற்சித்தார். அக்கா.. அக்கா என்று கதறினேன். அவர் என்னையே பார்த்தபடி இருந்தார். இரு கைகளையும் என்னை நோக்கி நீட்டினார். நான் ஓடிச்சென்று தாங்கி பிடித்தேன். படுக்கையில் படுக்க வைத்தேன்.
மருத்துவர்கள் அறைக்குள் ஓடோடோடி வந்தனர். உடனடியாக அக்காவின் காதில் அவரை சத்தமாக கூறி அழைக்குமாறு மருத்துவர் தெரிவித்தார். நான் அக்கா...! அக்கா...! என்று உரக்கக் கத்தினேன். அவர் என்னைப் பார்த்தார்.. பின்னர் கண்களை மூடிக் கொண்டார். அதன் பின்னர் மருத்துவர்கள் என்னை அறையை விட்டு வெளியே சென்று இருக்குமாறு கூறினர்.
இதுமட்டுமின்றி சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு நடந்த அரசியல் நிகழ்வுகள் குறித்தும் அவர் விரிவாக விளக்கியுள்ளார்.
அதில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், ஓ பன்னீர்செல்வம் புதிய முதல்வராக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் பாஜகவிடம் சரணடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். பின்னர் மத்திய அரசின் ஆதரவுடன், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட்டதாகவும் அந்த பிரமாணப் பத்திரத்தில் சசிகலா விரிவாக கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்த அப்போதைய மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, அருண் ஜேட்லி ஆகியோர் பற்றியும் சசிகலா தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.