Published : 17 Mar 2018 08:31 PM
Last Updated : 17 Mar 2018 08:31 PM

தமிழகம் முழுவதும் கிரானைட் கொள்ளை பற்றி சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுக: ராமதாஸ்

மதுரையில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் நடந்த கிரானைட் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் ஊழல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சகாயம் குழுவின் பணிகளை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. கிரானைட் கொள்ளை குறித்த சகாயம் விசாரணைக் குழுவைக் கலைப்பதில் காட்டிய ஆர்வத்தை, அந்த கொள்ளை குறித்த சிபிஐ விசாரணைக்கு சம்மதிப்பதில் தமிழக அரசு காட்ட மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்டு, 03.12.2014 அன்று விசாரணையைத் தொடங்கிய சகாயம் குழு, ஓராண்டு விசாரணைக்குப் பிறகு 23.11.2015 உயர் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. கிரானைட் ஊழலில் மொத்தம் ரூ.1,12,681.56 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டிருந்த சகாயம், இது சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார். சகாயம் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், சிபி. விசாரணைக்கு ஆணையிட ஆயத்தமானது. இது குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்டனர்.

ஆனால், கிரானைட் கொள்ளை குறித்த சிபிஐ விசாரணைக்கு சம்மதிக்க மறுத்து வரும் தமிழக அரசு, கிரானைட் ஊழல் தொடர்பாக சகாயம் குழு புதிய உண்மைகள் எதையும் கண்டுபிடித்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் அதைக் கலைக்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இப்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளது. சகாயம் குழு கிரானைட் கொள்ளை குறித்த விசாரணையை முடித்து விட்ட நிலையில், அது கலைக்கப்பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆனால், எதற்காக சகாயம் குழு விசாரணைக்கு ஆணையிடப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும்.

சகாயம் குழு விசாரணை என்பது கிரானைட் கொள்ளை தொடர்பான உண்மை கண்டறியும் விசாரணை தானே தவிர, குற்றப்புலனாய்வு விசாரணை அல்ல. சகாயம் குழு விசாரணையில் கிரானைட் கொள்ளை தொடர்பான உண்மைகள் ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர்வதன் மூலமே கிரானைட் கொள்ளையர்களை தண்டிக்க முடியும். கிரானைட் வளங்கள் தமிழக அரசின் சொத்துகள் என்பதால் அவற்றை கொள்ளையடித்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

''கிரானைட் கொள்ளைக்காக நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் அவை அழிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தடுக்கும் அளவுக்கு தமிழக அரசின் பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்படவில்லை. தவறு செய்த கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இத்துறைகளின் அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தமிழகத்தின் ஆட்சியாளர்களாவது கிரானைட் கொள்ளையைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. ஒட்டுமொத்த அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டதுதான் இதற்கு காரணமாகும். கிரானைட் கொள்ளைக்கு அரசியல் செல்வாக்கும் முக்கியக் காரணமாகும்'' என்று சகாயம் குழு விசாரணை அறிக்கையில் தெளிவாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மட்டும் நடந்த கிரானைட் கொள்ளையின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று சகாயம் குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் கிரானைட் கொள்ளையின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தமிழகத்தின் ஆண்டு பட்ஜெட் மதிப்பை விட 3 மடங்குக்கும் அதிகமாகும். இதற்கு காரணமானவர்களை தண்டித்து, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யாமல் இருப்பது தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். அதைத்தான் தமிழக ஆட்சியாளர்கள் செய்கிறார்கள்.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை குறித்து மட்டும்தான் சகாயம் குழு விசாரணை நடத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதைவிட 10 மடங்கு அளவுக்கு கிரானைட் கொள்ளை நடைபெற்றிருக்கிறது. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கிரானைட் கொள்ளை பெருமளவில் நடைபெற்றுள்ளது. இந்த கொள்ளைகள் குறித்து தமிழகம் தழுவிய அளவில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அதற்குக் காரணம், கிரானைட் கொள்ளையில் இந்நாள் மற்றும் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு தொடர்பு இருப்பது தான்.

இவை ஒருபுறமிருக்க, இந்த விஷயத்தில் தமிழக அரசின் ஒப்புதலுக்காக நீதிமன்றம் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில், சகாயம் விசாரணைக்குழுவை அமைத்ததே உயர்நீதிமன்றம் தான். அந்த வகையில் தமிழக அரசின் சம்மதத்துக்காக காத்திராமல் மதுரையில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் நடந்த கிரானைட் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x