Published : 22 Mar 2018 12:43 PM
Last Updated : 22 Mar 2018 12:43 PM

மத அமைதியை யார் குலைத்தாலும் வேடிக்கை பார்க்க மாட்டோம்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி உறுதி

தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை, அமைதியை யார் குலைத்தாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது எனச்சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், மதுரை கூடல் புதூர் மற்றும் சிக்கந்தர்சாவடியில் உள்ள ஜெபவீடுகளில் ஜெபம் நடத்துவதுதொடர்பாக கிறிஸ்தவர்களை சிலர் மிரட்டித் தாக்கி பைபிளை எரித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குமுதல்வர் பதிலளித்தார்.

இது குறித்து அவர் அளித்த பதில் வருமாறு:

“மதுரை மாநகரில் அன்பு நகர், செல்லையா நகர் மற்றும் ஆணையூர் ஆகிய இடங்களில் கடந்த மார்ச் 11 அன்று, ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் ஜெப வீடுகளில் ஜெபம் நடத்திக் கொண்டிருந்தபோது, அடையாளம்தெரியாத சில நபர்கள் அங்குச் சென்று ஜெபம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதனை நடத்திக் கொண்டிருந்த போதகர்கள் மற்றும் கலந்து கொண்டிருந்த கிறிஸ்தவ மக்களை தகாத வார்த்தைகளால் பேசி ஜெபம் நடத்தக்கூடாதெனஎச்சரித்து மிரட்டியுள்ளனர்.

இதேப் போன்று, அன்றையதினமே மதுரை மாவட்டத்தில் சிக்கந்தர் சாவடி, மந்தையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒருஜெபக்கூடத்தில் ஜெபம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் அவ்விடத்திற்குச் சென்றுஅங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சிலரை கைகளால் தாக்கி அங்கிருந்த சில பொருட்களைச்சேதப்படுத்தியதுடன், அவர்களிடமிருந்த பைபிளைப் பிடுங்கி, தீ வைத்து எரித்துள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக, மதுரை மாநகர், கூடல் புதூர் காவல் நிலையத்தில் இமானுவேல், ஸ்டனீஸ் லாஸ் மற்றும்ஜெகதீசன் ஆகியோர் தனித்தனியே அளித்த புகார்களின் பேரில் மூன்று வழக்குகளும், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் ரவி ஜேக்கப் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கும் பதிவு செய்துவிசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, காவல் துறையினர், அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குதொடர்பாக தினேஷ் மற்றும் சதீஷ்பாபு ஆகிய இருவரை மார்ச் 16 ம் தேதி அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். கூடல் புதுhர் காவல் நிலைய வழக்குகள் தொடர்பாக இந்து முன்னணி ஆரப்பாளையம் பகுதித் தலைவர்அரவிந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, இந்து முன்னணி ஆணையூர் பகுதி பொறுப்பாளர் சதீஷ்பாபு என்பவர் கூடல்புதுhர் காவல் நிலையத்தில்மார்ச்.11 அன்று அளித்துள்ள புகாரில், அனுமதியின்றி ஜெபக்கூடங்கள் செயல்படுவதாகவும், அக்கூடங்களில் மத்தியஅரசுக்கு எதிராகவும், கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்காகவும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்படுவதாகவும், எனவே இதுபோன்று மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஜெபக்கூடங்கள் மற்றும்போதகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க நான் உத்தரவிட்டதன் பேரில், காவல் துறையினர் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, மேலும் சம்பவங்கள்ஏதும் நடக்காமல் பார்த்துக் கொண்டனர். மத அமைதியைக் குலைக்க முயல்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். ”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x